/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்று உறுப்பு பொருத்த விளையாட்டு வீரர் மனு
/
மாற்று உறுப்பு பொருத்த விளையாட்டு வீரர் மனு
ADDED : நவ 19, 2024 05:54 AM

மதுரை: மதுரையில் கலெக்டர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல திட்ட அலுவலர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
வலைச்சேரிபட்டி சரவணன் அளித்த மனு: மேலுார் தாலுகாவில் நீர் நிலைகளில் சட்ட விரோதமாக மீன் வளர்த்து தனியார் பலர் பயன் பெறுகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு வருவாயை பாதுகாக்க மீன் வளர்ப்பை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அகில பாரத ஹிந்து மகா சபா மாநில செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் மனு: பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய வேலு நாச்சியார், அவரது மெய்க்காப்பாளர் குயிலிக்கு பாத்திமா கல்லுாரி சந்திப்பில் சிலை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் அளித்த மனுவில், ''மேலுார் தாலுகா கம்பூர் பகுதியில் 10 கிராமங்களை அழித்து அழகர் கோவில் வனப்பகுதியில் அமைய உள்ள ஸ்டெர்லைட் சுரங்க ஆலையை தடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசம் கட்சி நிறுவனர் செல்வகுமார், மாநில மகளிரணி செயலாளர் கவிதாபிச்சன் உட்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், சருகுவலையபட்டி பிரதீப் விளையாட்டு வீரர். கைமுறிவு ஏற்பட்டதால் அவருக்கு மாற்று உறுப்பு பொருத்த சுகாதார அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். தாமதமாவதால் பரிசீலனை செய்து இயற்கை கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு வீரர் பிரதீப் 20, கூறுகையில், ''கபடி, சைக்கிளிங் விளையாட்டுகளில் கோப்பை பெற்றுள்ளேன். செங்கல் சூளையில் பணியாற்றிய போது இயந்திரத்தில் சிக்கி எனது கை முறிந்ததால் விளையாட முடியவில்லை. வசதியற்ற எனக்கு தந்தை இல்லை. மாற்று உறுப்பு பொருத்தினால் முன்பு போல விளையாட முடியும். சுகாதார அமைச்சரிடம் மனு கொடுத்தும் நாளாகிவிட்டது. கலெக்டரிடம் சிகிச்சை அளிக்க மனு கொடுத்துள்ளேன் '' என்றார்.

