UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:52 PM
மதுரை: ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பதிவான வழக்கில் பா.ஜ., முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
பா.ஜ., நிர்வாகியாக இருந்த ஒரு பெண் 'தமிழக பா.ஜ., பொதுச் செயலாளராக இருந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் என்னை எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வாக ஆக்குகிறேன் என உறுதியளித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தார். மார்பிங் செய்த படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டார். மோசடியில் ஈடுபட்டார்,' என திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
கருப்பு முருகானந்தம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தன்னையும், குழந்தைகளையும் கணவர் கைவிட்டுவிட்டார் என அப்பெண் கூறினார். செலவிற்காக பணம் கேட்டார். வழங்கினேன். பணம் பறிக்கும் நோக்கில் அவர் என்னை ஏமாற்றினார். உண்மைகளை மறைத்து, எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் பொய் புகார் அளித்துள்ளார். நான் அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளிக்கவில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் நீதிபதி அக்.,9 க்கு ஒத்திவைத்தார்.
