
பெண்கள் சாதிக்காத துறை ஏது... காடுகள்கூட இன்று அவர்கள் வசமாகி இருக்கிறது. ராதிகா ராமசாமி. 53 வயதான இவர் 20 ஆண்டுகளாக வனவிலங்குகளை படம் பிடிக்க காடுகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வந்து கொண்டிருக்கிறார். தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த இவர், திருமணத்திற்கு பிறகுதான் இயற்கை, வனவிலங்குகள் மீதான ஈர்ப்பால் இத்தொழிலை தேர்ந்தெடுத்தார். இன்று இவர் கேமராவில் சிக்காத விலங்குகளே இல்லை எனலாம். இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு போட்டோகிராபரான ராதிகா, தினமலர் பொங்கல் மலருக்காக பேசுகிறார்.
''பத்தாம் வகுப்பு படிக்கும்போது போட்டோ எடுப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி ஊர்களுக்கு இடமாறும்போது அங்குள்ள நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள படம் பிடிக்க ஆரம்பித்தேன். 2004ல் முதன்முறையாக பரத்பூர் சரணாலயத்திற்கு சென்றேன். அங்கு பறவைகளை கண்ட போது பரவசம் ஆனேன் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இந்த தொழில்.
சென்னையில் கம்ப்யூட்டர் இன்ஜி., படித்தபோதும் எனக்கு இத்தொழிலில்தான் ஈர்ப்பு இருந்தது. போட்டோவில் விலங்குகளின் உணர்வை கொண்டு வருவதே சிறந்த புகைப்பட கலை. பறவைகளை படம் பிடிக்க வேண்டுமானால் குளிர்காலத்தில்தான் செல்ல முடியும். பனியில் கையெல்லாம் உறைஞ்சு போயிடும். கோடை காலத்தில் புலி உள்ளிட்ட விலங்குகளை படம் பிடிக்க செல்ல வேண்டும்.
விலங்குகளை படம் எடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். பொறுமை அவசியம். ஒருசமயம் ஜீப்பில் படம் எடுக்க சென்றேன். சாப்பிடும் போது புலிகள் வந்து விட்டன. அவற்றை அரைமணி நேரம் படம் பிடித்து திரும்பி பார்த்த போது என் உணவை குரங்கு சாப்பிட்டிருந்தது.
யானைகள் சுட்டித்தனம் உடையவை. யானைக் கூட்டம் வந்தபோது குட்டி யானை திடீரென படுத்துவிட்டது, பின்னால் வந்த அம்மா யானை எழுப்ப முயன்றது; யானைக்குட்டி துாங்கிவிட்டது. 'ஏம்மா என்னை எழுப்புற' என சலித்துக்கொண்டு எழுந்திருந்து சென்றது. காட்டுக்குள் என்ன நடந்தாலும் அதற்கு நாம்தான் பொறுப்பு. 2005ல் காட்டு யானை பக்கத்தில் வந்தது. முதன்முதலாக எனக்கு பயம் ஏற்பட்டது அப்போதுதான். பறவைகளை படம் எடுக்க செல்லும்போது பாம்புகள் அதிகமிருக்கும். பல தடவை அட்டைகடி வாங்கி இருக்கிறேன். காலை முதல் காத்திருந்தாலும் சில சமயம் ஒன்று கூட அமையாது. பேச ஆள் இருக்காது. பிரட், தண்ணீரை வைத்துக்கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
நான் எடுத்த படங்களை பார்த்து, நேரு பல்கலையில் 2007 காலண்டருக்காக அவர்கள் வளாகத்தில் இருந்த பறவைகளை எடுக்க அழைத்தார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த தொழில். முதன்முதலாக என் தொழிலுக்கு அங்கீகாரம் அது. 2008ல் Birds of Nature அமைப்பு முதல் 20 சிறந்த போட்டோகிராபர்களில் ஒருவராக என்னை தேர்வு செய்தது, அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விருதுகள் என்னை உத்வேகம் அளித்து வருகிறது.
காட்டுக்கு செல்லும்போது டிரைவர், அரசு வழிகாட்டியுடன் செல்வேன். வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிந்த டிரைவர் கிடைத்தால் இன்னும் சிறப்பு. 2 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுதான் ஒரு காட்டுக்குள் நுழைய முடியும்.
பறவைகளில் கழுகுகள் குறைந்து வருகின்றன. அவைதான் காடுகளில் இறந்த விலங்குகளின் எச்சங்களை உண்டு காட்டை சுத்தப்படுத்தும். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என 'பளிச்' சென சொல்கிறார் ராதிகா ராமசாமி.