ADDED : ஆக 30, 2026 06:31 PM

மேலுார்: பெரியார் பஸ்ஸ்டாண்ட் – கிடாரிப்பட்டி டவுன் பஸ்சை நிறுத்தியதால் அவ்வூர் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இக் கிராமத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிடாரிப்பட்டிக்கு தினமும் (44 ஏ) ஆறு முறை பஸ் இயக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது இந்த டிரிப்களில் மதியம், இரவு நேர பஸ்சை 60 நாட்களாக நிறுத்தி விட்டனர்.
அப்பகுதி மூர்த்தி கூறியதாவது: இரண்டு மாதங்களாக பஸ் வருவதில்லை. இதனால் அழகர் கோவில், மாங்குளம் ஒரு பஸ்சும், அங்கிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு மற்றொரு பஸ்சிலும் மாறிமாறி செல்வதால் பணம், நேரம் வீணாகிறது. மதுரை உட்பட நகர்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஊர் திரும்ப பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 7:25 மணிக்கு புறப்பட்ட பஸ்சை நிறுத்தியதால் அழகர் கோவில் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து கிராமத்திற்கு செல்கிறோம். இது குறித்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனே நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.
பொன்னேரி டெப்போ அதிகாரிகள் கூறுகையில், ‘‘கிடாரிபட்டிக்கு வேறு டெப்போவில் இருந்து வந்த பஸ்களின் நேரம் மாறியிருக்கலாம். மீண்டும் அதே நேரத்தில் அதே தடத்தில் இயக்க மனு கொடுத்தால் ஏற்பாடு செய்வோம் என்றனர்.
