ADDED : அக் 26, 2025 04:17 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரலீலை நாளை (அக். 27) நடக்கிறது. அதன்முன் நிகழ்ச்சியாக இன்று மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளுவார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை முடிந்து திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்தில் இருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்படும்.
தீபாராதனைகள் முடிந்து பூச்சப்பரத்தில் சுவாமி திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் சென்று அருள் பாலிப்பார்.

