UPDATED : நவ 18, 2026 06:32 PM
ADDED : நவ 18, 2026 06:27 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் சி.ஓ.பி.டி., (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக நுரையீரல் துறைத்தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
இத்துறை சார்பில் நடந்த உலக சி.ஓ.பி.டி., விழிப்புணர்வு தினவிழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல் தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ.,சரவணன் முன்னிலை வகித்தார்.
பிரபாகரன் பேசியதாவது: சிகரெட் புகை, தொழிற்சாலை புகை, சுற்றுச்சூழல் போன்ற நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கு சி.ஓ.பி.டி., பிரச்னை வரும். விறகடுப்பில் தொடர்ந்து சமைப்பவர்களும் பாதிக்கப்படலாம். இவர்களுக்கு தொடர்ந்து நோயின் தன்மை மோசமாகுமே தவிர முழுமையாக குணமாகாது. மூச்சுக்குழாய் விரிவதற்கான மருந்துகள், கை, கால்களுக்கான உடற்பயிற்சி தருவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சி.ஓ.பி.டி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் நிமோகாக்கல் தடுப்பூசி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் இன்புளுயன்ஸா தடுப்பூசி ஆண்டுதோறும் செலுத்தப்படுகிறது.
இம்மருத்துவமனையில் உள்ள 45 படுக்கைகளில் தினமும் 5 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. மாதந்தோறும் 1200 முதல் 1400 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். குளிர்காலத்தில் அதிகாலையில் பனி இருக்கும். வாகனங்களின் புகை பனியுடன் கலப்பதால் அதை சுவாசிக்கும் போது சுவாசிப்பதில் எரிச்சல் ஏற்படும். சி.ஓ.பி.டி., நோயாளிகள் அதிகாலை நடைபயிற்சியை தவிர்க்கலாம் என்றார்.
இணைப்பேராசிரியை பிரியா, ஏ.ஆர்.எம்.ஓ.,க்கள் முருகபொற்செல்வி, சுமதி கலந்து கொண்டனர். மருத்துவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
