/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கையில வாங்கல... பையில போடல... 'போனஸ்' போன இடம் தெரியல... ஆவின் பால் உற்பத்தியாளர்கள் புலம்பல்
/
கையில வாங்கல... பையில போடல... 'போனஸ்' போன இடம் தெரியல... ஆவின் பால் உற்பத்தியாளர்கள் புலம்பல்
கையில வாங்கல... பையில போடல... 'போனஸ்' போன இடம் தெரியல... ஆவின் பால் உற்பத்தியாளர்கள் புலம்பல்
கையில வாங்கல... பையில போடல... 'போனஸ்' போன இடம் தெரியல... ஆவின் பால் உற்பத்தியாளர்கள் புலம்பல்
ADDED : நவ 04, 2025 04:18 AM
மதுரை: மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பலருக்கு போனஸூக்கு (ஊக்கத் தொகை) பதில் ஒரு கிலோ ஸ்வீட், காரம் மட்டும் கொடுத்து சரி செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் இந்தாண்டு லாபத்தில் இயங்கும் ஒன்றியங்களில் மதுரை ஆவினும் ஒன்று. இதனால் ஏப்.,2024 முதல் மார்ச் 2025 வரை ஆவினுக்கு பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு 9766 பேருக்கு லிட்டர் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் ரூ. 5.63 கோடி போனஸ் வழங்கப்பட்டது. இத்தொகை பெரும்பாலான ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இப்பணியை ஆவின் விரிவாக்க அலுவலர்கள் (இ.ஏ.,) முறையாக கண்காணிக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 பால் ஒன்றியங்களில், சிலவற்றில் உற்பத்தியாளர்கள் பெற்றிருந்த கடனை ஒப்பிட்டு, அவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 1 கிலோ ஸ்வீட், காரம் கொடுத்து ஊக்கத் தொகையை சரிக்கட்டி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: 'கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல...' என ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் தங்கவேலு பாடுவார். அந்த கதை தான் ஆவின் போனஸ் வழங்கிய விஷயத்தில் உற்பத்தியாளர்களுக்கு நடந்துள்ளது. போனஸ் வழங்கியாச்சு என்கின்றனர். அந்த பணம் எங்கள் கையில் (வங்கி கணக்கில்) கிடைக்கவில்லை. ஆனால் அந்த பாக்கி, இந்த பாக்கி என கணக்கு சொல்லி போனஸ் சரியா போச்சு என கூறிவிட்டனர். ஆனால் இதை வெளியில் சொல்ல முடியவில்லை. அப்படி தெரிவித்தால் நாங்கள் தொடர்ந்து பால் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.
எனவே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது குறித்து ஆவின் அதிகாரிகள் குழு விசாரணை நடத்த வேண்டும். மாதம்வாரியான பால் தொகுப்பு (ஒர்க்கிங் ஷீட்), பணப் பட்டுவாடா, உறுப்பினர்கள் சேர்க்கையின் (பிரவேச புத்தகம்) போது உள்ள உற்பத்தியாளர்கள் கையெழுத்துக்களையும், போனஸ் பெற்றதற்காக ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களை ஒப்பிட வேண்டும்.
உண்மையான உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கணக்கெடுக்க வேண்டும். தனி அதிகாரியான கலெக்டர் பிரவீன்குமார் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றனர்.

