/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஓரணியில் தமிழ்நாடு'விற்கு ஆதார் சேகரிப்புதி.மு.க.,விற்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு
/
'ஓரணியில் தமிழ்நாடு'விற்கு ஆதார் சேகரிப்புதி.மு.க.,விற்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு
'ஓரணியில் தமிழ்நாடு'விற்கு ஆதார் சேகரிப்புதி.மு.க.,விற்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு
'ஓரணியில் தமிழ்நாடு'விற்கு ஆதார் சேகரிப்புதி.மு.க.,விற்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு
ADDED : ஜூலை 19, 2025 03:38 AM
மதுரை: மக்களிடம் தி.மு.க.,வினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக சேகரித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனு:தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துகிறது. தி.மு.க.,வினர் வீடுகள் தோறும் செல்கின்றனர். மக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். எங்கள் வீட்டிற்கு தி.மு.க.,வினர் 10 பேர் வந்தனர். எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினர். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.தர மறுத்த போது, வீட்டு பெண்கள் மாதம்தோறும் அரசிடம் பெறும் ரூ.1000 உரிமைத் தொகையை நிறுத்திவிடுவதாக மிரட்டினர். அனைவரின் அலைபேசி எண்களை கேட்டு வாங்குகின்றனர். எண் கொடுக்கப்பட்டதும் 'ஓரணியில் தமிழ்நாடு' என தகவல் வருகிறது. தொடர்ந்து ஓ.டி.பி.,வருகிறது. அதை தெரிவித்ததும் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. மக்களை தி.மு.க.,வில் சேருமாறு வற்புறுத்தி வருகின்றனர். தி.மு.க.,வில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர்.அரசியல் பிரசாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறு.தி.மு.க.வினர் மக்களின் ஆதார், ரேஷன் கார்டு, அலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை கோருவது மக்களின் அடிப்படை உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமையை மீறுவதாகும்.அரசியல் பிரசாரத்திற்காக மக்களிடமிருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. தி.மு.க.,வினர் மக்களிடமிருந்து எக்காரணத்திற்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்கக் கூடாது. இதுவரை தி.மு.க.,வினர் சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை அழிக்க வேண்டும். மக்களிடமிருந்து தி.மு.க.,வினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைமை செயல் அதிகாரி விசாரித்து தி.மு.க.,பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.