/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறிப்பிட வழக்கு
/
பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறிப்பிட வழக்கு
ADDED : அக் 08, 2025 12:22 AM
மதுரை: பெட்ரோல், டீசல் விற்பனையின்போது நுகர்வோருக்குரிய பில்லில் அடக்க விலை, வரி விகிதங்களை குறிப்பிட தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. காரணம் மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு வரி விகிதங்கள்தான். பெட்ரோல் சில்லரை விற்பனை விலையில் 55 சதவீதம்,டீசல் விலையில் 50 சதவீதம் வரியாகும். பெட்ரோல், டீசல் விற்பனை விலையானது பெட்ரோலியம் குரூட் ஆயில், மத்திய அரசின் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன், மாநில அரசின் வரியை உள்ளடக்கியது. பொதுத்துறை, தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்குரிய பில்களில் வரிகள் குறித்து எவ்வித குறிப்பும் இடம்பெறுவதில்லை.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி ஒவ்வொரு நுகர்வோரும் தான் வாங்கும் பொருளின் தரம், அளவு, விலை, வரி விபரங்களை அறிய உரிமை உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையின்போது நுகர்வோருக்குரிய பில்லில் அடக்க விலை, மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதங்களை குறிப்பிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.
நீதிபதிகள் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர், மாநில நிதித்துறை முதன்மை செயலர், பொதுத்துறை மற்றும் தனியார்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.7 க்கு ஒத்திவைத்தனர்.