/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு; பலத்தை காட்ட லட்சங்களில் ‛பரிசு மழை இப்போதே ஆரம்பம்
/
மதுரையில் தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு; பலத்தை காட்ட லட்சங்களில் ‛பரிசு மழை இப்போதே ஆரம்பம்
மதுரையில் தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு; பலத்தை காட்ட லட்சங்களில் ‛பரிசு மழை இப்போதே ஆரம்பம்
மதுரையில் தி.மு.க., இளைஞரணி மண்டல மாநாடு; பலத்தை காட்ட லட்சங்களில் ‛பரிசு மழை இப்போதே ஆரம்பம்
ADDED : அக் 08, 2025 12:22 AM
மதுரை : தமிழகத்தில் மண்டலம் வாரியாக தி.மு.க., இளைஞரணி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு மேற்கு மண்டலத்தில் கோவையும், தெற்கு மண்டலத்தில் மதுரையிலும் முதற்கட்டமாக நடத்துவதற்கான பணிகளை கட்சித் தலைமை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சிகள் வெற்றி வியூகத்திற்கான கூட்டணி கணக்குகளில் மும்முரமாகியுள்ளன. கூட்டணி பலத்தை பெரிதும் நம்பியுள்ள ஆளுங்கட்சிக்கு பேரிடியாக விஜய்யின் த.வெ.க., வருகை அமைந்ததால் அது தனித்து நிற்குமா, அ.தி.மு.க., - பா.ஜ., வுடன் கூட்டணி வைக்குமா என அரசியல் ஆட்டம் தமிழக அரசியலில் துவங்கிவிட்டது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்ற வியூகத்தையும் தி.மு.க., வகுத்து வருகிறது.
அதில் ஒன்று தான் இளைஞரணி மாநாடுகளை நடத்துவது. இதற்காக இளைஞரணியில் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 18 முதல் 35 வயதுள்ளவர்களின் ஓட்டுக்களை சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற வேண்டும் என இளைஞரணி செயலாளர் உதயநிதி மாவட்ட செயலாளர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி இவ்வகை ஓட்டுக்கள் த.வெ.க.,விடம் குவிந்து கிடக்கிறது. இதை விஜய் பிரசாரத்தின் போது பிற கட்சிகள் கண்கூடாகவே பார்த்துவிட்டன. இதற்கு இணையாக ஆளுங்கட்சியிலும் இளைஞர்கள் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த இளைஞரணி மண்டல மாநாடுகள்.
முதல் மாநாடு கோவையில் நடக்கிறது. 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அக்.,12ல் நடக்கும் என்பது தள்ளிவைக்கப்பட்டு இம்மாதமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 2வது மாநாடு மதுரையில் நடத்தப்படவுள்ளது. மாநாடு தேதி அறிவிப்பு, இடம் தேர்வு என எதுவுமே நடக்காத நிலையிலும் மாநாட்டிற்கான பணிகளை முடுக்கி விடும் வகையில் அமைச்சர் மூர்த்தி களம் இறங்கியுள்ளார்.
இதன் எதிரொலியாக 'அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞரணி நிர்வாகிகளுக்குரூ.1 லட்சம், ரூ.75, ரூ.50 ஆயிரம் என அடுத்தடுத்து ரொக்க பரிசுகள் வழங்கப்படும்' என அவர் அறிவித்துள்ளார். இது இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தொகுதிகளில் 60 முதல் 80 தொகுதிகளாக பிரித்து மேற்கு, மத்தி, தெற்கு, சென்னை என நான்கு மண்டல மாநாடுகள் நடக்க உள்ளன. பிற கட்சிகளை போல் இளைஞர்கள் கூடிக்கலையும் கூட்டமாக இல்லாமல், கட்டமைப்புக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் முன்மாதிரியான மாநாடாக நடத்தப் படும்.
குறைந்தது 3 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே தி.மு.க., பொதுக்குழு மதுரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதைவிட இருமடங்கு இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.