/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேராசிரியை நிகிதா புகாரின் பேரில் சி.பி.ஐ., வழக்கு
/
பேராசிரியை நிகிதா புகாரின் பேரில் சி.பி.ஐ., வழக்கு
பேராசிரியை நிகிதா புகாரின் பேரில் சி.பி.ஐ., வழக்கு
பேராசிரியை நிகிதா புகாரின் பேரில் சி.பி.ஐ., வழக்கு
ADDED : ஆக 30, 2025 04:04 AM
மதுரை: திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோயில் முன்பாக நிறுத்தியிருந்த காரில் இருந்த நகை காணாமல் போனது தொடர்பாக பேராசிரியை நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
பத்ர காளியம்மன் கோயில் தற்காலிக காவலராக இருந்த அஜித்குமார் ஜூன் 27ம் தேதி, பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் ஜூன் 28ம் தேதி இறந்தார். இது தொடர்பாக போலீசார் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர். போலீசாரால் கொல்லப்பட்ட அஜித் குமாரின் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து ஜூலை 14 முதல் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரிக்கின்றனர். அஜித்குமாருடன் அழைத்து செல்லப்பட்ட சகோதரர் நவீன்குமார், நண்பர்கள், அஜித்குமார் குடும்பத்தினர், நிகிதா உள்ளிட்டோரிடமும் விசாரித்த அதிகாரிகள் ஆக., 20ல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் சி.பி.ஐ., தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸ் டிரைவர் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்து இன்னும் விசாரணை துவங்கவில்லை என சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகிதா புகாரில் வழக்குப்பதிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உரிய நேரத்தில் வழக்கின் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகளை நீதிபதிகள் பாராட்டினர்.
இந்நிலையில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில் நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் நகை காணாமல் போனது தொடர்பாக சி.பி.ஐ., தரப்பில் வழக்குப்பதியப்பட்டது. ஜூன் 27ல் நகை காணாமல் போனதாக அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் 'யாரென்று தெரியாதவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிகிதா அளித்த புகாரின் பேரில் நிகிதா, அவரது தாய், அஜித்குமாருடன் வேலை செய்த பணியாளர்கள், கோயில் அதிகாரிகள், திருப்புவனம் போலீசாரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இந்த விசாரணை முடிவிலேயே காணாமல் போன நகையை யார் எடுத்தது என்ற உண்மை தெரியவரும்.

