/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி மருத்துவமனைகளில் கேள்விக்குறியாகும் கண்காணிப்பு சர்ச்சையில் சி.எச்.ஓ., நீண்டநாள் விடுப்பு
/
மாநகராட்சி மருத்துவமனைகளில் கேள்விக்குறியாகும் கண்காணிப்பு சர்ச்சையில் சி.எச்.ஓ., நீண்டநாள் விடுப்பு
மாநகராட்சி மருத்துவமனைகளில் கேள்விக்குறியாகும் கண்காணிப்பு சர்ச்சையில் சி.எச்.ஓ., நீண்டநாள் விடுப்பு
மாநகராட்சி மருத்துவமனைகளில் கேள்விக்குறியாகும் கண்காணிப்பு சர்ச்சையில் சி.எச்.ஓ., நீண்டநாள் விடுப்பு
ADDED : அக் 25, 2025 04:36 AM

மதுரை: மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் (சி.எச்.ஓ.,) நீண்ட நாள் விடுப்பில் சென்றதால் மழைக்காலத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கண்காணிப்பு, ஆய்வுப் பணிகள் கேள்விக்குறியாகி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் 33 சுகாதார மையங்கள், 61 நலவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. சுகாதார மையங்களில் மகப்பேறு, குழந்தைகள் நலன், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், சர்க்கரை உள்ளிட்ட இணை மருத்துவ சேவை வசதிகள் உள்ளன. ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காய்ச்சல், தலைவலி உட்பட பொதுவான நோய்களுக்கான முன்சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இங்கும் சுழற்சி முறையில் தினமும் ஒரு டாக்டர் பணிக்கு வந்து செல்கிறார். இவற்றின் செயல்பாடுகள் நகர்நல அலுவலர், உதவிநகர்நல அலுவலர் தலைமையில் கண்காணிக்கப்படுகின்றன. வாரம் ஒருமுறை ஆய்வும் செய்யப்படும்.
ஆனால் மாநகராட்சி சி.இ.ஓ., இந்திரா ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மருத்துவ விடுப்பில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், துாய்மைப் பணியாளர்கள் போராட்டம், அவர் லேண்ட் தனியார் நிறுவன பணிகளை கண்காணிப்பது, தீபாவளி, மழைக் காலத்தில் வார்டுகளில் தேங்கிய குப்பை உரிய நேரத்தில் அகற்றும் பணிகள் என கவனம் செலுத்த வேண்டிய பணிகளை கவனிக்கிறார்.
சி.எச்.ஓ.,வுக்கு பதில் ஒரு மாதம் பின்பே மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுரு நியமிக்கப்பட்டாலும் ஆரம்ப சுகாதர மையங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பும், வார ஆய்வுகளும் கேள்விக்குறியாகி உள்ளது.
குறிப்பாக ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை அகற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ், பிளாஸ்டிக் தடுப்பு, அபராதம் விதிப்பு உள்ளிட்ட சுகாதாரம், துாய்மை பணிகளில் சி.எச்.ஓ., பங்கு முக்கியமானது. ஆனால் அவருக்கு நீண்ட நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் கூடுதல் பொறுப்பு ஏற்ற குமரகுருவுக்கு மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகளால் மாநகராட்சி பகுதியை கண்காணிக்க முடியவில்லை. இப்பிரச்னைக்கு மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
துணைமேயர் நாகராஜன் கூறுகையில், மழைக்காலத்தில் சுகாதாரப் பணிகள் சீரான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். மருத்துவ சேவை, நோயாளிகள் நலன் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

