UPDATED : நவ 17, 2026 06:18 PM
ADDED : நவ 17, 2026 06:16 PM
மகா விஷ்ணுவை மணந்தார் மிருணாளினி
தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் மிருணாளினி ரவி. டி.வி.,யில் காமெடி ஷோவில் பங்கேற்று தற்போது ஆன்மிக பேச்சாளராக வலம் வரும் மகா விஷ்ணுவை இவர் காதலித்தார். ஆகஸ்ட்டில் இதை அறிவித்த நிலையில் தற்போது சத்தமின்றி அவரை திருமணம் செய்து, போட்டோக்களை பகிர்ந்துள்ளார். தனியார் ரெசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஜி.வி.பிரகாஷின் 'அன்புடன் மகி'
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்புடன் மகி' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகியாக ‛ஜோ' பட புகழ் மாளவிகா மனோஜ் நடிக்க, படத்தை ஹரிஹரன் ராம் இயக்குகிறார். கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து காதல் படமாக உருவாகிறது. படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தாண்டு ரிலீஸ் செய்கின்றனர்.
ஹனுமன் பட ஹீரோவிற்கு 'டும் டும்'
வளர்ந்து வரும் தெலுங்கு இளம் நடிகர் தேஜா சஜ்ஜா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகாகி, 'ஹனுமன்' படம் மூலம் இந்திய அளவில் 'சூப்பர் ஹீரோ'வாக உருவெடுத்தார். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் மவுரியாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அடுத்தமாதம் திருமணம் நடைபெறுகிறது.
திருமண பந்தம் நீடிக்கிறது: ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள ரம்யா கிருஷ்ணன், ‛‛நாங்கள் கணவன், மனைவியாகத் தான் உள்ளோம். எங்கள் பணி காரணமாக தனித்தனியாக வசிக்கிறோம். இது நுாறு சதவீதம் வேலை சம்பந்தப்பட்ட முடிவு மட்டுமே. தனித்தனியாக வசிப்பதால் தான் எங்கள் திருமண பந்தம் இன்னும் நீடிக்கிறது. காதலித்த காலத்திலேயே நாம் ஏன் திருமணம் செய்யணும், 'லிவிங் டுகெதர்' முறையில் வாழலாமே என்று என்னிடம் கணவர் கேட்டார். ஒருவேளை நான் அப்போதே அதற்கு சம்மதித்திருக்கலாமோ’’ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ராபர்ட் பேட்டின்சன்
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இதில் வரும் ஹீரோக்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும். கடந்த 5 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் டேனியல் கிரேக் ஹீரோவாக நடித்தார். இனி அந்த வேடத்தில் நடிப்பதில்லை என இவர் அறிவித்த பிறகு புதிய ஹீரோ தேடும் பணி நடந்தது. நிக்கோலஸ் ஹோல்ட், காலம் டர்னர் உள்ளிட்ட நடிகர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் ராபர்ட் பேட்டின்சன் புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிவிக்கப்பட்டு, அந்த லுக்கில் போட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‛தி டிவிலைட் சாகா, டெனன்ட், பேட்மேன், தி ஒடிசி’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை டெனிஸ் வில்லெனுவ் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
நவ.27ல் ‛ஆக்டோபஸ்’ வெப்சீரிஸ் ரிலீஸ்
ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகி உள்ள வெப்சீரிஸ் ‛ஆக்டோபஸ்’. அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிஷன், சித்து குமரேசன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு குடியிருப்பில் இளம் தம்பதியர் ஒருவரில் பெண் திடீரென மாயமாக, அவரை அக்கம் பக்கத்தினரின் தேடும் முயற்சியால் வெளிவரும் மர்மங்களே இதன் கதை. சஸ்பென்ஸ் திரில்லரான இந்த தொடர் நவ.27ல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
செருப்பு அணியாத விஜய் ஆண்டனி: காரணம் சொன்ன மனைவி
மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடித்த ‛அப்பா குட்டி’ படம் நவ.20ல் வெளியாகிறது. இப்பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா, மூத்த மகள் மீரா மறைந்து 5 ஆண்டுகளுக்கு பின் சினிமா விழாவில் பங்கேற்கிறேன். விஜய் ஆண்டனி செருப்பு அணிவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. மீராவுக்காக ஏகப்பட்ட செருப்பு, ஷூ வாங்கி வைத்து இருந்தோம். அவர் மறைந்ததால் விஜய் ஆண்டனி இந்த முடிவை எடுத்தார். அவரிடம் விலை உயர்ந்த வாட்ச்சும் உள்ளது. ஆனால் மீரா கடைசியாக அவரது கையில் கட்டியிருந்ததை தான் இப்போதும் கட்டி உள்ளார். என் அப்பா 7 வயதில் விட்டு போய்விட்டார். அந்த பாசத்தை எனக்கு தந்தது விஜய் ஆண்டனி என்றார்.
