மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி
கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன்பின் இவரின் அடுத்த படத்தை இயக்குவது, தயாரிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது வேல்ஸ் நிறுவனம் ரஜினி படத்தை தயாரிக்க பேசி வருவதாக சொல்கிறார்கள். மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை சுந்தர் சி இயக்க போகிறாராம். ஏற்கனவே ரஜினி, சுந்தர் சி கூட்டணியில் 1997ல் அருணாச்சலம் படம் வெளியானது.
'ரெட்ரோ' படத்திலும் இளையராஜா பாடல்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சில படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது டிரெண்ட் ஆகி உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வெளியாகி உள்ள ரெட்ரோ படத்தில் இளையராஜா இசையில் ரஜினி நடித்து வெளியான ஜானி படத்திலிருந்து 'செனோரீட்டா ஐ லவ் யூ' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். சமீபத்தில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக அந்த படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த படத்தில் அனுமதி பெற்றே பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புவோம்.
சர்வதேசப் படமாக இருக்கும் : அல்லு அர்ஜுன்
அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க போகிறார். பேண்டஷி கலந்த சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. இப்படம் தொடர்பாக மும்பையில் நடந்த வேவ்ஸ் 2025 நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன்,''அட்லி என்னிடம் சொன்ன ஐடியாக்கள் பிடித்திருந்தது. எங்கள் இருவரது எண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளதாக உணர்ந்தேன். இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய காட்சி அதிசயத்தைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். இது இந்திய உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச திரைப்படமாக இருக்கும்” என்றார்.