/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்
/
மேலுாரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்
ADDED : பிப் 22, 2024 06:31 AM

மேலுார்: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேற்று மேலுார் வந்தார். மேலுார், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் ஆய்வு செய்தஅவர், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
மேலுார் வந்த கலெக்டர் சங்கீதா கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு சுத்தமாக வைத்திருக்க உத்தரவிட்டார். பின்னர் நுாலகம், ஊராட்சி அலுவலகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்த பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருவாதவூரில் ஒருங்கிணைந்த வேளாண் மையம், பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்தவர் மரக்கன்று நட்டார். வேப்படப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களிடம் மதிய உணவை குறித்து கேட்டறிந்தவர் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார்.
மாலையில் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அலங்காநல்லுார் சக்கரை ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை பராமரிக்கவும், செம்மினிபட்டி கூத்தன்கண்மாயில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பலர் மனு கொடுத்தனர். சொக்கம்பட்டி கல்குவாரியை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தும்படி விவசாயிகள் பழனிச்சாமி, மணி, சாகுல்ஹமீது, சரவணன் மனு கொடுத்தனர். கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, ஆர்.டி ஒ., ஜெயந்தி, தாசில்தார் முத்துபாண்டியன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.