/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ‛'சிப்காட்' தேவை ; தமிழகத்தில் முதல் ‛'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்
/
‛'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ‛'சிப்காட்' தேவை ; தமிழகத்தில் முதல் ‛'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்
‛'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ‛'சிப்காட்' தேவை ; தமிழகத்தில் முதல் ‛'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்
‛'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ‛'சிப்காட்' தேவை ; தமிழகத்தில் முதல் ‛'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்
ADDED : டிச 01, 2024 05:07 AM
மதுரை : தமிழகத்தில் 'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என 'கிளஸ்டரை' உருவாக்கி தனியாக 'சிப்காட்' அமைக்க அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் அலோபதிக்கு அடுத்ததாக சித்த மருத்துவத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஆயுர்வேதா, யோகா நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளின் கீழ் மாற்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உணவே மருந்து அடிப்படையில் யோகா நேச்சுரோபதி பிரிவுக்கும் சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது அலோபதிக்கு மாற்று மருந்தாக சித்த மருத்துவம் தான் முன்தடுப்பு மருந்தாக மக்களை காப்பாற்றியது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவை மருந்துக்கான மூலிகைகளை தனித்தனியாக சேகரித்து காயவைத்து அரைத்து பக்குவப்படுத்தி தயாரிக்கின்றன.
இந்நிறுவனங்களுக்கென ஒருங்கிணைந்த தொழில் வளர்ச்சி மையமாக குழுமம் (கிளஸ்டர்) தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. மதுரை முதல் திருநெல்வேலி வரையான தென் தமிழகத்தில் மட்டும் 350 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
இதனால் மதுரையில் சித்த மருந்துகள் தயாரிப்புக்கென குழுமம் அமைத்து 'சிப்காட்' மையத்தை அரசு உருவாக்க வேண்டும் என மதுரை மடீட்சியாவின் ஆயுஷ் அமைப்பு தலைவர் ராஜமுருகன், துணைத்தலைவர் ஜெயவெங்கடேஷ் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: 'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என குழுமம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் நீண்டநாளாக தெரிவித்து வருகிறோம். மருந்துகளை தரப்பரிசோதனை செய்வதற்கும் அதற்கான மூலப்பொருட்களை பாதுகாப்பதற்கும் கொள்முதல், விற்பனை செய்வதற்கும் ஒருங்கிணைந்த சந்தையாக 'ஆயுஷ் கிளஸ்டர்' அமைக்க வேண்டும்.
நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் அனைத்தும் சென்னையில் தான் தரப்பரிசோதனை செய்வதற்கு அனுப்பப்படுகிறது. சீசனுக்கு ஏற்ப நிலவேம்பு, துளசி, ஆவாரம்பூ போன்ற மூலிகைகள் கிடைப்பதில்லை. அவற்றை பசுமையாக பெறும் போது மழைக்காலத்தில் காயவைப்பது சிரமமாக உள்ளது. மூலிகைகள், மருந்துகளை சேகரித்து கொடுப்பவர்கள் காயவைக்காமல் அப்படியே தருகின்றனர். விவசாயிகள் துளசி, துாதுவளை போன்ற மூலிகைகளை பயிரிட்டு மழைக்காலத்தில் விற்க முடியாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் சரியாக உலராத நிலையில் மருந்து தயாரிக்கும் போது பூஞ்சை தாக்குதல் உருவாகிறது. இதனால் எங்களது உழைப்பும் அதற்கான செலவும் வீணாகிறது. எங்களிடம் இடவசதி இருந்தால் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி காய வைத்து உலர வைக்க முடியும். உலர்த்த பதப்படுத்தும் சோலார் டிரையர் போன்ற கருவிகள் இருந்தால் மழைக்காலத்திலும் தொய்வின்றி மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.
தென்தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் குறைந்தது 25 ஏக்கர் இடம் ஒதுக்கி சிப்காட் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். 'சிப்காட்' அமைத்தால் அந்த இடத்திற்கான தடையில்லா சான்றிதழ், ரோடு, குடிநீர், பாதாள சாக்கடை, மின்விளக்கு வசதிகளை எளிதாக பெற முடியும்.
அதில் பொது வசதி மையம் (சி.எப்.சி.,) அமைப்பதற்கு மானியம் வழங்கினால் மருந்து தயாரிப்புக்கு தேவையான கருவிகளை நிறுவி தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை துவங்க முடியும்.
தனிநபராக பெரியளவில் இடத்தை வாங்கி கருவிகளை நிறுவி செயல்படுத்துவது கடினம். எனவே சிப்காட் அமைத் தால் மதுரை முதல் திருநெல்வேலி வரை மருந்து நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். ரப்பர் தொழில், சுங்குடி போன்ற ஒரே தொழில் செய்யும் நிறுவன குழுமங்களின் 'சி.எப்.சி.,' மையத்திற்கு அரசு மானியம் வழங்கியதைப் போல 'ஆயுஷ்' மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தனி குழுமம் அமைக்க வேண்டும் என்றனர்.