/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., - காங்கிரஸ் சங்கங்களிடையே மோதல்
/
தி.மு.க., - காங்கிரஸ் சங்கங்களிடையே மோதல்
ADDED : ஜூலை 23, 2025 01:30 AM
மதுரை : மதுரை கே.புதுார் தொழிற்பேட்டை அருகே அரசு போக்குவரத்துக் கழக டெப்போ உள்ளது. இங்கு தி.மு.க.,வின் எல்.பி.எப்., தொழிற்சங்க ஆதிக்கமே அதிகம் உள்ளது. ஊழியர்களுக்கு வழித்தடங்களில் பணி ஒதுக்குவது, விடுப்பு அனுமதி, பணியில் சேர்வது உள்ளிட்ட 'டிராபிக்' நிர்வாக பணிகளை அவர்களே ஒதுக்குகின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் ஒருவருக்கு சூப்பர்வைசர் பணியை ஒதுக்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் பெற்று வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது போன்று கிண்டலாக எழுதி ஒட்டி இருந்தனர். இதனால் தொ.மு.ச., வினர் கொதித்து போயினர்.
இதற்கு காங்.,கட்சியின் ஐ.என்.டி.யு.சி.,யை சேர்ந்தவர்களே காரணம் எனக்கருதி புதுார் போலீசிலும் தெரிவித்தனர். போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''எல்லா டெப்போக்களிலும் ஆளும்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் இதுபோல நடக்கின்றனர். போஸ்டர் ஒட்டியது யாரென தெரியவில்லை. ஆளும்கட்சியினர் கூறியதற்காக சம்மன் அனுப்பாமல் விசாரிக்கின்றனர். சிவில் மேட்டரில் சம்மன் இன்றி அழைத்து விசாரிப்பது தொடர்ந்தால் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றனர்.