காங்., உறுப்பினர்கள் சேர்க்கை: 'போலி'களுக்கு டில்லி 'செக்' மாநிலத் தலைவர் போட்டோ நீக்கம்
காங்., உறுப்பினர்கள் சேர்க்கை: 'போலி'களுக்கு டில்லி 'செக்' மாநிலத் தலைவர் போட்டோ நீக்கம்
ADDED : பிப் 21, 2026 06:57 AM

மதுரை: தமிழக காங்.,ல் போலி உறுப்பினர்களை சேர்த்து 'கணக்கு' காண்பிக்கும் நிர்வாகிகளுக்கு 'செக்' வைக்கும் வகையில் ஆன்லைனில் கியூ.ஆர்., கோடு உடன் உறுப்பினர் அட்டை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில தலைவர் போட்டோவும் இடம் பெறவில்லை.
தமிழக காங்.,ல் உறுப்பினர்களின் அடையாள அட்டை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். மாநிலத் தலைவராக இருந்த அழகிரி காலத்தில் உறுப்பினர் அட்டைகளின் காலக்கெடு 2024 ல் முடிந்தது. தற்போது வரை புதுப்பிக்கவில்லை.
இந்நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைமுறையை ஆன்லைனில் மாற்றி காங்., டில்லி தலைமை உத்தரவிட்டது.
இதன்படி உறுப்பினராக விரும்புவோரின் அலைபேசியில் இருந்து 'மிஸ்டு கால்' கொடுத்தால் அதற்கான 'லிங்க்' ஐ டில்லி தலைமை அனுப்பும். அதில் அலைபேசி எண். போட்டோ உள்ளிட்ட விவரங்கள் பதிவிட்டு ரூ.10 செலுத்தி உறுப்பினரே பதிவு செய்யலாம் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநில தலைவர் போட்டோ நீக்கம் இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: இதற்கு முன் மாநில தலைமையே உறுப்பினர் சேர்க்கைக்கான கார்டுகள் வழங்கி அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கும்.
இதில் வட்டார அளவில் உறுப்பினர்கள் பலர் போலியாக இருப்பது தெரிந்தது.
இதே புகார் மகளிரணி சேர்க்கையிலும் எழுந்தது. உறுப்பினர் சேர்க்கையில் மாநில, மாவட்ட தலைவர்கள் அதிகாரத்துடன் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்தது. அவர்கள் அதிகாரத்தை குறைக்கும் வகையில் டில்லி தலைமை ஆன்லைன் சேர்க்கையை கொண்டுவந்தது.
இதன்படி உறுப்பினரின் தனி ஐ.டி., நம்பர், கியூ.ஆர்., கோடு உடன் புதிய அட்டை வழங்கப்படுகிறது. மாநில தலைவர் படம் இடம் பெறுவது நீக்கப்பட்டுள்ளது என்றார்.

