ADDED : நவ 14, 2026 10:14 PM
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இசைவு தீர்ப்பாய மையத்தை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி துவக்கி வைத்தார். நிர்வாக நீதிபதி பி.வேல்முருகன் மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால், தீர்வு காண இசைவு தீர்ப்பாயம் மூலம் ஒரு நடுவரை நியமிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் அல்லது சம்பந்தப்பட்ட நிபுணர் அல்லது நடுவர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிடும். தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை. மறு ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்றம் அல்லது அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் தேடலாம். அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம். உயர்நீதிமன்றத்தில் இசைவு தீர்ப்பாய மையம் உள்ளது. தற்போது தென்மாவட்டங்கள் பயனடையும் வகையில் அம்மையத்தின் கிளை உயர்நீதிமன்றக் கிளையில் துவக்கப்பட்டுள்ளது.
