ADDED : செப் 30, 2024 04:59 AM
மதுரை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் சுரேஷ், கனகராஜ் வரவேற்றனர்.
தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பண்டிகை முன்பணமாக ரேஷன் கடைகளுக்கான மானியம் ரூ.500 கோடி வழங்குதல், ஓய்வூதியம் கமிட்டி அமைத்தல், 4வது ஊதிய நிர்ணய குழு அமைத்தல், மாவட்ட துணைப்பதிவாளர்கள் மூலம் பணிநிலைத் திறன் வழங்குதல், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், மருந்து, காய்கறி கடை நடத்த கட்டாயப்படுத்துவதை தவிர்த்தல், ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்ய பண்டகசாலைகள் சுயமாக கொள்முதல் செய்ய அனுமதித்தல், லாரி வாங்க விருப்பம் தெரிவிக்கும் பண்டகசாலைகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.
மாநில துணைத் தலைவர் தரணி, துணைப் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.