/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'குற்றவியல் நடவடிக்கை வேறுதுறை ரீதியான நடவடிக்கை வேறு' உயர்நீதிமன்றம் உத்தரவு
/
'குற்றவியல் நடவடிக்கை வேறுதுறை ரீதியான நடவடிக்கை வேறு' உயர்நீதிமன்றம் உத்தரவு
'குற்றவியல் நடவடிக்கை வேறுதுறை ரீதியான நடவடிக்கை வேறு' உயர்நீதிமன்றம் உத்தரவு
'குற்றவியல் நடவடிக்கை வேறுதுறை ரீதியான நடவடிக்கை வேறு' உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 23, 2025 05:18 AM
மதுரை : குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை வேறுபட்டவை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் உதவி துவக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் பொன்னழகு. இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து துவக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். 'அது சட்டவிரோதமானது. ரத்து செய்து பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து அதற்குரிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்,' என பொன்னழகு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 2023 ல் பிறப்பித்த உத்தரவு: வழக்கு நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட வழிகாட்டுதலை மட்டுமே வழங்க முடியும். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,விசாரணையை முடித்து கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதி அறிக்கையில் மனுதாரர் விடுவிக்கப்பட்டால், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து துவக்கக் கல்வி இயக்குனர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை ஒரே நேரத்தில் துவக்கலாம். இதற்கு தடை இல்லை. ஒரு அரசு ஊழியர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யும்போது தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படலாம். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,4 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது தேவையற்றது. பொன்னழகு குற்றமற்றவர் என இறுதி அறிக்கையில் விடுவிக்கப்பட்டால், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது.
குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை வேறுபட்டவை. குற்றவியல் வழக்கில் ஒருவரை தண்டிக்க மிகத் துல்லியமான ஆதாரம் தேவை. தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின் கீழ் ஒரு பணியாளரை தண்டிக்க அத்தகைய ஆதாரம் தேவையில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையை கைவிட்டாலும்கூட, தவறான நடத்தைக்காக ஒரு அரசு ஊழியர் தண்டிக்கப்படலாம். குற்றவியல் வழக்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளுடன் ஒப்பிடமுடியாது.
குற்றவியல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும்கூட, அது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வதற்கு தடையாக இருக்காது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.