/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலத்தை வளமாக்கும் சணப்புச்செடி சாகுபடி
/
நிலத்தை வளமாக்கும் சணப்புச்செடி சாகுபடி
ADDED : அக் 22, 2025 07:58 AM

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தோடனேரியில் விளைநிலங்களுக்கு இயற்கை உரம் சேர்க்க விவசாயிகள் சணப்புச் செடி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில் நிலங்களில் தொடர்ந்து பயிர் செய்வதும், ரசாயன உரங்களை பயன்படுத்துவதாலும் மண்ணின் வளம் குறைகிறது. இதனை மீட்டெடுக்கவும், தொடர்ந்து சாகுபடி சிறக்கவும், மண்வளத்தை அதிகரிக்கவும் சணப்பு, தக்கை பூண்டு, கொழுஞ்சி செடிகளை நிலங்களில் வளர்க்கின்றனர். இவை வேகமாக வளரக்கூடியவை 30 முதல் 40 நாட்கள் வளர்ந்த செடிகளை உழவு செய்து, டிராக்டரால் மண்ணில் மக்க செய்கின்றனர்.
இது இயற்கை உரமாக மாறுவதால் மண்வளம் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தோடனேரி விவசாயி அழகர்சாமி, ''இந்த இயற்கை உரத்தால் மகசூல் அதிகரிக்கும். கடந்த முறை ஏக்கருக்கு 40 மூடை கிடைத்தது. வைகோலும் ரூ.8000 வரை விலை போனது. தற்போது 2ம் போகத்திற்கு சணப்புச் செடிகளை மக்க செய்கின்றேன். கடந்தமுறை என்.எல்.ஆர்., தற்போது கோ 50 ரக நெல் நடவு செய்ய உள்ளேன்'' என்றார்.