ADDED : செப் 25, 2024 03:21 AM

திருமங்கலம் : திருமங்கலம் மேலக்கோட்டை கூடக்கோவில் ரோட்டில் மைக்குடி கிராமத்தை அடுத்து ரோட்டின் இடதுபுறம் 50 அடி ஆழ தண்ணீர் நிறைந்த தரை மட்டக்கிணறு உள்ளது.
பகல் நேரத்திலேயே கிணறு இருப்பது சரிவர தெரியாத சூழ்நிலையில், இரவு நேரத்தில் பறக்கும் வாகனங்கள் இக்கிணற்றுக்குள் பாயும் அபாயம் உள்ளது.
கிணறு இருக்கும் இடத்தின் ரோடு வளைவாக இருப்பதால் இவ்வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகள் கிணறை மூடவோ, அல்லது தடுப்புச் சுவர் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் காங்கேயநத்தம் அருகே ரோட்டில் இருந்து 20 அடி துாரத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றுக்குள் சிவகாசியை சேர்ந்தவர்கள் வந்த வேன் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் 13 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இதுபோல விபரீதம் விளையும் முன் மைக்குடி ரோட்டில் உள்ள கிணறு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளன.