ADDED : ஜூலை 22, 2025 03:54 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் தக் ஷின ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.,) சார்பில் கேட் கீப்பர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஓபன் லைன் பிரிவு கிளைச் செயலாளர் சேதுக்கரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை பொதுச் செயலாளர் கார்த்திக் சங்கிலி முன்னிலை வகித்தார். கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேர வேலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குதல், அனைத்து கேட்டுகளையும் சிக்னலுடன் இணைத்தல், காலியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஓபன் லைன் பிரிவு உதவிச் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
கோட்டத் தலைவர் ராஜூ, உதவித் தலைவர் ஜெயராஜசேகர், செயலாளர் சிவக்குமார், இணைச் செயலாளர் சங்கரநாராயணன், உதவிச் செயலாளர் குமார், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் லெனின் ஆகியோர் பங்கேற்றனர்.