/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைது செய்ய சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி; முகமது ஹனிபாவை விடுதலை செய்த திண்டுக்கல் கோர்ட் உத்தரவு ரத்து
/
கைது செய்ய சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி; முகமது ஹனிபாவை விடுதலை செய்த திண்டுக்கல் கோர்ட் உத்தரவு ரத்து
கைது செய்ய சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி; முகமது ஹனிபாவை விடுதலை செய்த திண்டுக்கல் கோர்ட் உத்தரவு ரத்து
கைது செய்ய சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி; முகமது ஹனிபாவை விடுதலை செய்த திண்டுக்கல் கோர்ட் உத்தரவு ரத்து
UPDATED : அக் 26, 2025 07:34 AM
ADDED : அக் 26, 2025 04:48 AM
மதுரை: பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய முகமது ஹனிபா தலைமறைவானதால் அவருக்கு எதிராக நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. அதை நிறைவேற்றி கைது செய்ய சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயன்ற வழக்கில், முகமது ஹனிபாவை திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்தது. அந்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தண்டனை விதிக்கும் முன் கேள்வி எழுப்ப முகமது ஹனிபாவை ஆஜராக உத்தரவிட்டது.
பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை செல்ல இருந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்திற்கு கீழ், சில பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்து, அத்வானியை கொல்ல முயன்றனர். வெடிகுண்டுகளை போலீசார் அகற்றினர். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை அதிகாரியாக மதுரை சிறப்பு விசாரணைக் குழுவின் அப்போதைய டி.எஸ்.பி.,கார்த்திகேயன் இருந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய தென்காசியை சேர்ந்த முகமது ஹனிபாவிற்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்தது. அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பதுங்கியிருந்தார். வாரன்டை நிறைவேற்ற 2013 ஜூலை 8 ல் டி.எஸ்.பி.,மற்றும் போலீசார் முகமது ஹனிபாவை கைது செய்ய முயன்றார். டி.எஸ்.பி.,கார்த்திகேயனை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது ஊழியர் கடமையை நிறைவேற்றவிடாமல் தடுத்தல், வெவ்வேறு குழுக்களிடையே வெறுப்புணர்வை துாண்டுதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளின் கீழ் முகமது ஹனிபா மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். 2 கத்திகள், மின்னணு டெட்டனேட்டர்கள், ஜெல் பைகள், முக்கிய ஹிந்து தலைவர்களின் 'ஹிட் லிஸ்ட்' கொண்ட வெள்ளை காகிதத்தை கைப்பற்றினர். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முகமது ஹனிபாவை திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2018 டிச.,20 ல் விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
தண்டிக்க வேண்டும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்:
முகமது ஹனிபா மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கிடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்றம் விடுவித்தது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளது. கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தண்டனையின்றி விடுவிக்கப்படுவர் என்பதற்கான ஆபத்தான சமிக்ஞையாகவும் உள்ளது. இது நீதி வழங்கல் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும். தேசத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், மக்களின் நம்பிக்கை, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க கடுமையான அணுகுமுறையை நீதித்துறை கையாள வேண்டும் என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து முகமது ஹனிபாவை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு வாதிட்டார்.
கொடூரமான குற்றம் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயற்சித்தது கொடூரமான குற்றம். அவ்வழக்கில் முகமது ஹனிபா தலைமறைவாக இருந்ததால் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இதை நிறைவேற்றுவது போலீசாரின் கடமை. இதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிய முகமது ஹனிபாவை கைது செய்ய சென்றது. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூர் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்க முடியாது. போலீசாரின் நடமாட்டத்தை அவர் அறிந்திருந்தால் தப்பியோடியிருப்பார்.
இயற்கையாகவே காவல்துறை இத்தகைய சந்தர்ப்பங்களில் ரகசியத்தை பேணுவது உறுதி.
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை விதிக்கும் முன் முகமது ஹனிபாவிடம் இந்நீதிமன்றம் கேள்வி எழுப்ப விரும்புகிறது. அவர் அக்.28 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

