/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 26, 2025 04:48 AM
மதுரை: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இரு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - திருநெல்வேலி: இன்று (அக்., 26) இரவு 9:35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06135), நாளை காலை 8:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும். செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
திருச்செந்துார் - தாம்பரம்: அக். 27 (நாளை) இரவு 10:30 மணிக்கு திருச்செந்துாரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06136), மறுநாள் காலை 10:30 மணிக்கு தாம்பரம் செல்லும். ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லுார், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட ரயில்கள், ஒரு 'ஏசி சேர் கார்' பெட்டி, 11 'சேர் கார்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
திருச்செந்துார் - திருநெல்வேலி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அக். 27 இரவு 9:00 மணிக்கு திருச்செந்துாரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06106), இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும். மறுமார்க்கத்தில் இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06105), மறுநாள் அதிகாலை 12:30 மணிக்கு திருச்செந்துார் செல்லும்.
மேற்கண்ட ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லுாரில் (ரயில் '06105' தவிர்த்து) ஸ்டேஷன்களில் நின்று செல்லும். 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்பதிவு நிறைவு கிறிஸ்துமஸ் பண்டிகை, வரும் டிச., 25ம் தேதி வருகிறது. அதே காலத்தில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளும் முடிந்து விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களுக்கு முன் ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், டிச., 23, 24ம் தேதிகளில் பயணிக்க விரும்புவோர், கடந்த இரண்டு நாட்களாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, துாத்துக்குடி, செங்கோட்டை, பாண்டியன், மலைக்கேட்டை உள்ளிட்ட விரைவு ரயில்களில், 'ஸ்லீப்பர்' பெட்டிகளுக்கான முன்பதிவு முடிந்தது. அடுத்த 30 நிமிடங்களில், 'ஏசி' வகுப்புகளுக்கான முன்பதிவும் முடிந்தது. இருப்பினும், வந்தே பாரத், தேஜஸ், வைகை, குருவாயூர் விரைவு ரயில்களில் மட்டும் கணிசமாக டிக்கெட்டுகள் இருந்தன. இதேபோல், கோவை தடத்தில் செல்லும் வந்தே பாரத், இன்டர்சிட்டி, கோவை சூப்பர் பாஸ்ட் ஆகிய விரைவு ரயில்களில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும், கணிசமாக அளவுக்கு டிக்கெட்டுகள் உள்ளன.

