/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் 'தில்' காட்டுவாரா தினேஷ்: வார்டுகளில் பிரச்னைகள் அதிகம்
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் 'தில்' காட்டுவாரா தினேஷ்: வார்டுகளில் பிரச்னைகள் அதிகம்
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் 'தில்' காட்டுவாரா தினேஷ்: வார்டுகளில் பிரச்னைகள் அதிகம்
மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் 'தில்' காட்டுவாரா தினேஷ்: வார்டுகளில் பிரச்னைகள் அதிகம்
ADDED : பிப் 15, 2024 05:56 AM

மதுரை - மதுரை புதிய மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மக்கள் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சி மதுரை. 100 வார்டுகளை கொண்டுள்ளது. நகருக்கு வளர்ச்சி திட்டங்கள் முக்கியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகள் எத்தனை கமிஷனர்கள் வந்தாலும் தீராமலேயே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம், ஒவ்வொரு மாமன்றக் கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளையே மீண்டும் மீண்டும் தெரிவித்து எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என நொந்து போய் கேட்கின்றனர். வார்டுகளில் பாதாளச் சாக்கடை உடைப்பு, குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு, தெரு விளக்குகள் எரிவதில்லை, ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு, குடிநீர் பிரச்னை, கால்வாய்கள் அடைப்பு, கொசுத் தொல்லை என பல பிரச்னைகள் உள்ளன.
குப்பைக்கு எப்போ 'குட்பை'
இதற்கு பிரதான காரணம், நாள் ஒன்றுக்கு நகரில் 700 டன்னுக்கும் மேல் குப்பை சேர்கின்றன. குப்பை சேகரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் உரிய நேரத்தில் குப்பை அள்ளப்படுவதில்லை என்பது தீராத பிரச்னை. இதற்கு காரணம் வாகனங்கள் தட்டுப்பாடு, துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை, உரிய மேற்பார்வை இல்லாதது.
தவிர மாநகராட்சிக்குள் ஏராளமான பகுதிகளில் மேடுபள்ளமான ரோடுகள். தற்போது 2500க்கும் மேற்பட்ட ரோடு பணிகள் நடக்கின்றன. ஆனால் தரமற்றதாக அமைக்கப்படுவதாக சர்ச்சை உள்ளது. மேலும் இதை கண்காணிக்க வேண்டிய உதவிப் பொறியாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரோடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பணிப்பளுவால் தவிக்கின்றனர்.
வரி வருவாயில் கவனம்
மாநகராட்சி வருவாய் இனங்களில் வரி வருவாய் மிக முக்கியம். ஆனால் ரூ.பல கோடி நிலுவை உள்ளது. பெரிய தனியார் நிறுவனங்கள், மாநகராட்சி அதிகாரிகள் மறைமுக கூட்டு காரணமாக வசூல் பணிகள் மந்தமாக நடக்கிறது.
பில் கலெக்டர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க முன்வரவேண்டும். மாநகராட்சி பணியாளர்கள் மத்தியில் பதவி உயர்வு வழங்காதது பெரும் மனக்குமுறலாக உள்ளது. ஸ்கில்டு லேபர் 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொறியியல் பிரிவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. உயர் அதிகாரிகள் வார்டுகளில் தங்களுக்கு வேண்டிய அலுவலர்களை நியமித்துள்ளனர். உரிய இடங்களில் தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
நகரமைப்பு பிரிவில் விதிமீறல் கட்டடங்கள், வரிவிதிப்பில் ஏற்றத்தாழ்வு, அனுமதியில்லாத கட்டடங்கள் என பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அதிகாரிகளுக்கு வழக்கமாக உள்ள அரசியல் அழுத்தங்களை தாண்டி இதுபோன்ற மக்கள் பிரச்னைகளில் கமிஷனர் முக்கியத்துவம் காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

