/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வில் பாரபட்சம்; நெடுஞ்சாலை இளநிலைப்பொறியாளர்கள் வேதனை
/
உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வில் பாரபட்சம்; நெடுஞ்சாலை இளநிலைப்பொறியாளர்கள் வேதனை
உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வில் பாரபட்சம்; நெடுஞ்சாலை இளநிலைப்பொறியாளர்கள் வேதனை
உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வில் பாரபட்சம்; நெடுஞ்சாலை இளநிலைப்பொறியாளர்கள் வேதனை
ADDED : செப் 28, 2024 05:26 AM
மதுரை : உதவி கோட்டப்பொறியாளர் பதவி உயர்வில் பாரபட்சமாக துறைத் தலைமை அதிகாரிகள் செயல்படுவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்து பணியில் சேர்ந்தவர்கள் இளநிலை பொறியாளராகவும், பி.இ., முடித்து சேர்ந்தவர்கள் உதவிப்பொறியாளராகவும் உள்ளனர்.
இளநிலை வரைபட அலுவலராக (ஜெ.டி.ஓ.,) இருந்து பதவி உயர்வில் வரும் இளநிலைப் பொறியாளர்கள் அடுத்த நிலையான உதவி கோட்டப் பொறியாளராக உயர்வு பெறும்போது சிக்கலை சந்திக்கின்றனர். இந்த உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களிடையே 3:1 என்ற விகிதத்தில் உதவி கோட்டப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
உதவி கோட்டப் பொறியாளராவதற்கு வரைபட அலுவலராக 5 ஆண்டுகள், இளநிலைப் பொறியாளராக 5 ஆண்டுகள் என இருபதவியிலும் பத்தாண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என விதிமுறை இருந்தது. 2018ல் இளநிலை பொறியாளராக மட்டுமே பத்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என திருத்தம் செய்தனர்.
அதன்பின் உதவி கோட்டப் பொறியாளர் பதவி உயர்வுக்கு இளநிலை பொறியாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
கோர்ட் உத்தரவுப்படி (3:1 என்ற விகிதத்தில்) இளநிலை பொறியாளர்களுக்குரிய பதவி உயர்வு வழங்காததால் அனைத்துப் பணியிடங்களும் உதவிப் பொறியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. இதனால் 5 ஆண்டுகளாக தங்களுக்குரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக இளநிலை பொறியாளர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் ஊரக பணித்துறை பொறியியல் சங்க மாநில தலைவர் ஜெகன், செயலாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் முருகன் கூறியதாவது:
உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் ஒரே தன்மையுள்ளவையே. அரசு பணிவிதிப்படி 3:1 என்பது நுாறு பணியிடங்களில் 25 பணியிடங்கள் இளநிலைப் பொறியாளர்களுக்கானது. இதனை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் எங்கள் ஒதுக்கீடையும் உதவிப் பொறியாளர்களைக் கொண்டு நிரப்புகின்றனர். இது உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு முரணானது.
கடந்த ஐந்தாண்டுகளில் 67 பணியிடங்கள் இளநிலை பொறியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். இத்துறையின் தலைமை அலுவலர்கள் இதனை கடைபிடிக்காமல் பாரபட்சமாக நடப்பதால் பாதிக்கப்படுகிறோம் என்றார்.