/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகை
/
தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 09, 2025 05:59 AM
மதுரை: மதுரையில் வட்டச் செயலாளர் பதவி பறிபோனதால் அப்பகுதியினர் தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தெற்குவாசல் 53வது வார்டு வ.செ., கார்த்திகேயன். இவர் மீது செயின் பறிப்பு வழக்கு உள்ளதாக கூறி நவ., 5ல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயன் தலைமையில் அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள், நகர் செயலாளரான தளபதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை அரைமணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டனர்.
கார்த்திகேயன் கூறுகையில், 'என் அப்பா பல ஆண்டுகளாக இந்த வார்டில் வ.செ., ஆக இருந்தார். நான் பி.இ., படிக்கும்போது சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் செயின் அறுந்தது. அதை அந்த மாணவர் தேடி எடுத்துச் சென்றுவிட்டார். ஆனால் தெற்குவாசல் பகுதிச் செயலாளர் ஜீவன்ரமேஷ் துாண்டுதலில், என் மீது செயின் பறிப்பு வழக்கு பதியப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளேன். இதற்கிடையே என்னை நீக்கியுள்ளனர். நகர் செயலாளரிடம் நியாயம் கேட்டோம்' என்றார்.
தளபதி எம்.எல்.ஏ., கூறுகையில், 'இது தலைமை உத்தரவு. முதல்வர் ஸ்டாலின் நடத்திய 'ஒன் டூ ஒன்' முகாமில் கார்த்திகேயன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

