ADDED : அக் 24, 2026 04:26 AM
கர்ப்பிணிகள் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு பால் போதவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்.
-நளினி, மதுரை
கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், ரத்தசோகை வரும் வாய்ப்பு அதிகம். எனவே தொடர் கண்காணிப்பு, பரிசோதனை அவசியம். காய்கறி, முட்டை, பால், பழங்கள் அதிகமாகவும் இனிப்பு, கிழங்கு, எண்ணெய் பதார்த்தங்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும். வயிற்றில் குழந்தை பெரிதாக வளர்ந்து, ஆப்பரேஷன் தேவைப்படுமோ என பயந்து உணவைக்குறைக்கக் கூடாது. சத்தான சரிவிகித உணவு நல்லது.
உப்பைக்குறைத்து, புரோட்டின் அதிகம் எடுப்பதும் அவசியம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
எந்த அம்மாவுக்கும் தாய்ப்பால் போதவில்லை என்ற குறை வராது. மனம் தான் காரணம். குழந்தை பிறந்தவுடன் சீம்பால், சொட்டு சொட்டாக தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என சிலர் நினைப்பர். குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்க ஆரம்பிக்கும். இது தான் இயற்கை.
சர்க்கரை நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்கள், தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும். மிக அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும். குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒருசிலருக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்படும்.
பாலுக்காக மட்டும் குழந்தை அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி. சிறுநீர், மலம் கழித்திருக்கலாம், குழந்தை படுத்திருக்கும் நிலையோ கையில் வைத்திருக்கும் நிலையோ அசவுகரியத்தை தந்திருக்கலாம். உடல் சூடு, குளிர்ச்சி எதுவாகவும் இருக்கலாம். காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
– டாக்டர் ரேவதி ஜானகிராம், மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர், மதுரை.
