ADDED : செப் 19, 2024 05:05 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மெய்யணம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55; ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதே ஊரைச் சேர்ந்த உறவினர் கலுவன் குடும்பத்தினரின் இடத்தை 10 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு வாங்கி பிளை ஆஷ் கற்கள் தொழில் நடத்தி வந்தார்.
2 ஆண்டுகளான நிலையில் ஒத்தி வாங்கியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
செப். 16ல், கற்களை டிராக்டரில் எடுத்துச் சென்ற போது, கலுவன் தரப்பினர் தடுத்து தாக்கியதாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
கலுவன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டி நேற்று மாலை 6:00 மணியளவில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.. அலுவலகம் முன் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ஒத்தி தொடர்பாக நீதிமன்றம் மூலமாக தீர்வு காணும்படி கூறி டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர்.

