/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையில்லா சோகத்தில் குன்றத்து விவசாயிகள்
/
மழையில்லா சோகத்தில் குன்றத்து விவசாயிகள்
ADDED : ஆக 25, 2025 02:43 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றுப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், கண்மாய்களில் தண்ணீர் இல்லாததாலும் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
வழக்கமாக விவசாயிகள் கோடையில் உழவு செய்து, ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம்.
இந்தாண்டு இதுவரை மழை இல்லாததாலும், மானாவாரி கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும், வரும் காலங்களில் மழை பெய்யுமா என்ற சந்தேகத்தாலும் ஏராளமான விவசாயிகள் பணிகளை துவக்கவில்லை. வைகை அணை தண்ணீரால் நிரம்பும் தென்கால், பாணாங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் சிவராமன், பாண்டி கூறியதாவது: மழை இல்லாததால் கோடை உழவே செய்யவில்லை. இந்நிலையில் கண்மாய்களும் வறண்டு விட்டன. மானாவாரி பகுதிகளில் கோடை உழவு செய்து ஆடி பதினெட்டில் நடவுக்காக விதை நெல்கள், காய்கறிகள் விதைகள் வாங்கி தயாராக இருந்தோம். ஆனால் மழை பெய்யவில்லை. கிணறுகள், ஆழ்குழாய்களிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால் நெல் நாற்றுப் பாவவும், காய்கறிகள் விதைக்கவும் ஆர்வம் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மானாவாரி விவசாயிகள் நெல் நாற்று பாவினர். அப்போது மழையின்றி பலர் நெல் நாற்றுக்களை பாதி விலைக்கு விற்று நஷ்டம் அடைந்தனர். பலரது நாற்றுகள் கருகின. அதே நிலை இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆடி 18ஐ தவிர்த்து விட்டோம். எப்பொழுது மழை பெய்கிறதோ அப்போதுதான் பணிகள் துவங்க முடிவு செய்ய உள்ளோம் என்றனர்.