/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லை மீறி வளரும் நெற்றவரை களைச்செடி விவசாயிகள் கவலை
/
நெல்லை மீறி வளரும் நெற்றவரை களைச்செடி விவசாயிகள் கவலை
நெல்லை மீறி வளரும் நெற்றவரை களைச்செடி விவசாயிகள் கவலை
நெல்லை மீறி வளரும் நெற்றவரை களைச்செடி விவசாயிகள் கவலை
ADDED : மே 23, 2025 04:46 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நெல்லை மீறி வளரும் நெற்றவரை களைச்செடிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உத்தப்பநாயக்கனுார், உ.புதுக்கோட்டை, சிறுபட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் கொண்டு பரவலாக நெல் பயிரிட்டுள்ளனர். நெல் பயிரிடும் போதே களைக்கொல்லிகள் தெளித்தும், அடுத்தடுத்து 2 அல்லது 3 முறை களையெடுக்கும் பணி நடந்தது.
இருந்த போதும் நெற்றவரை (பார்ன்யார்டு கிராஸ், குதிரைவாலி புல்) என்ற களைச்செடிகள் நெல் பயிருடன் வளர்ந்துள்ளன. இரண்டரை அடி உயரத்திற்கு நெல் பயிர் விளைந்துள்ள நிலையில் அதையும் தாண்டி நெல் பயிருக்கு மேல் வளர்ந்து குதிரைவாலி பயிர் போன்று கதிர்பிடித்தும் உள்ளன.
சி.நடுப்பட்டி முருகன்: மூன்று முறை களையெடுத்தும் அதற்கும் மீறி நெல் பயிர்களை மறைத்து நெத்தவரை வளர்ந்துள்ளது. அறுவடை தருணத்தில் இந்த களை செடிகளை பறித்தும், வெட்டியும் அழிக்க வேண்டிய கூடுதல் பணிசுமை உருவாகியுள்ளது. சில நாட்களாக இந்த செடிகளை மட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
இருந்தும் அளவுக்கு அதிகமாக நெருக்கமாக விளைந்துள்ளதால் மீண்டும் நெல் அறுவடையின் போது இதன் விதைகளும் கலக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: இவ்வகை களைச்செடிகள் நெல் வயல்களில் தான் அதிகமாக வளர்கின்றன. பெரும்பாலும் கைகளால் பறித்துதான் அகற்ற வேண்டும். வரிசை நடவு செய்திருந்தால் கோனோவீடர் கருவி மூலம் களைகளை வயலுக்குள் புதைய வைத்தாலும், நெல் பயிருக்கு அருகில் உள்ள களைகளை கைகளால் தான் அகற்ற வேண்டும். நாற்று நட்ட 15 முதல் 40 நாட்களுக்குள் இரண்டு மூன்று முறை அகற்ற வேண்டும். இருந்தாலும் அதன் வளர்ச்சித்திறன் அதிகமாக இருப்பதாலும், அதற்கான காலநிலையின் காரணமாகவும் களைச்செடிகள் அதிகரித்து விடுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.