ADDED : செப் 09, 2026 05:49 AM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாநில துணைச்செயலாளர் கோணப்பன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் குள்ளப்ப நாயுடு, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முருகன், கோரிக்கை குறித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் வேலு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.போராட்டத்தில், கடந்த, 2007ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில், ஒவ்வொரு நபருக்கும், 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. அவற்றை, கிராம கணக்கிலும், வட்ட கணக்கிலும் பதிவு செய்ய வேண்டும். யு.டி.ஆர்., திருத்தம் தொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் விவசாயிகள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாசில்தார் வேலுவிடம், விவசாயிகள் மனு வழங்கினர்.
