ADDED : மே 25, 2025 04:37 AM

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளந்திரி ஐந்து கோயில் முத்தன் சுவாமி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடந்தது. மக்கள் நாட்டு வகை மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.
கள்ளந்திரி, அம்மாச்சிபுரம் உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோயில் முத்தன் சுவாமி கண்மாய் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதில் சுற்றுவட்டாரப் பகுதியினர் வேண்டுதலாக மீன் குஞ்சுகளை காணிக்கையாக விடுவர். ஆண்டுதோறும் நடக்கும் மீன்பிடித் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர்.
கண்மாயில் நீர்வரத்து குறைந்ததையடுத்து இந்தாண்டுக்கான மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது. நேற்று (மே 24) அதிகாலையிலேயே சுற்றுவட்டார கிராம மக்கள் கண்மாய் கரையோரம் அணிவகுத்து நின்றனர். சூரிய உதயமானதும் கிராமப் பிரமுகர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வெள்ளைக் கொடி காட்டி விழாவை துவக்கினர்.
இதையடுத்து கண்மாய் கரையில் இருந்தவர்கள் ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர். மீன்கள் துள்ளிக் குதித்து தப்ப முயன்றாலும் மக்கள் விரித்த வலையில் சிக்கின. சிலர் வெறுங்கைகளாலும் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிலரது வலையில் பாம்புகளும் சிக்கின. ஜிலேபி, கட்லா உள்ளிட்ட நாட்டு வகை மீன்களும் பிடிபட்டன. இத்திருவிழா மூலம் மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதியினரின் ஐதீகம்.