/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தி.மு.க., காப்பாற்றுகிறது முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
/
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தி.மு.க., காப்பாற்றுகிறது முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தி.மு.க., காப்பாற்றுகிறது முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தி.மு.க., காப்பாற்றுகிறது முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2025 07:53 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் விதிமீறி வரிவிதிப்பு செய்ததில் ரூ.150 கோடி முறைகேடு நடந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை தி.மு.க., அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார்.
இம்முறைகேடு குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கமிஷனர் சித்ராவிடம் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்ட கவுன்சிலர்கள் மனு அளித்தனர். அப்போது, 'இம்முறைகேட்டில் ஈடுபட்ட பலர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள். ஓய்வு பெற்றவர்கள்.
குறிப்பாக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்திய முக்கிய நபர் ஒரே நாளில் ராமநாதபுரத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது மனைவி தற்போது மேயரின் நேர்முக உதவியாளராக உள்ளார். அவரை இதுவரை விசாரிக்கவில்லை.
வெளிப்படையாக விசாரணை நடக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என செல்லுார் ராஜூ வலியுறுத்தினார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள் உள்ளன.
இதற்கு மாநகராட்சி ஏ, பி, சி, என மூன்று நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.275 கோடி மாநகராட்சிக்கு வருவாய் வருகிறது.வணிக கட்டடங்களுக்கான வரியை விதிக்காமல் குடியிருப்புக்கான வரியை விதித்து மோசடி நடக்கிறது.
இந்த மோசடியை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தான் கண்டுபிடித்து அப்போதைய கமிஷனர் தினேஷ்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட தி.மு.க.,வினருக்கு தொடர்பு உள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
ஆணையாளர், உதவி ஆணையாளர், பில் கலெக்டர், வருவாய் உதவி ஆணையாளர் போன்றோரின் பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பெண்களாக இருப்பதால் அவரது கணவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள் கவுன்சிலர்களுடன் இணைந்து மக்களை மிரட்டி லஞ்சம் கேட்கின்றனர்.
வரிவிதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், கட்சியினரை காப்பாற்ற தி.மு.க., அரசு முயற்சிக்கிறது.