/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 19, 2025 01:13 AM

உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தும் அமைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார் தலைமையில் நடந்தது.
டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் உசிலம்பட்டி ஆனந்த், செக்கானூரணி திலகராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடத்திற்கு தீயணைப்பு, வருவாய், காவல், மாசுக்கட்டுப்பாடு துறையினரிடம் சான்று பெற வேண்டும். முதலுதவிக்கான மருந்து பொருட்கள் வைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு அனுமதி பெற்ற 118 இடங்களில் மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சிலை பாதுகாப்புக்கென அமைப்பாளர்கள் 2 பேர் இருக்க வேண்டும். 10 அடிக்கு மேல் சிலை இருக்க கூடாது. கூம்பு வடிவ குழாய் வைக்க கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும்.
வெடிபொருட்கள் உபயோகிக்க கூடாது. ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும். இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

