ADDED : ஜூலை 14, 2025 02:27 AM
திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுாரில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. வாகனங்களுக்கான (சி.என்.ஜி.,) காஸ் சிலிண்டர்களும் விநியோக மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் கப்பலுாரில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு ஆண்டிபட்டிக்கு காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. மதுரையைச் சேர்ந்த கவி பிரசாத் 28, ஓட்டிச் சென்றார். மாட்டுத்தாவணி செல்லும் ரிங் ரோட்டில் கப்பலுார் மேம்பாலத்தின் மீது வந்தபோது லாரியில் இருந்த சிலிண்டர்களில் காஸ் கசிவு ஏற்பட்டது.
இதையறிந்த டிரைவர் உடனே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் சென்ற வீரர்கள் கசிவு ஏற்பட்ட இரண்டு சிலிண்டர்களை அகற்றினர். இதன் பின் லாரி அங்கிருந்து கிளம்பியது. காஸ் கசிவை டிரைவர் உடனே கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.