ADDED : அக் 30, 2025 04:15 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா, ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள 4 லட்சம் காலியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முப்பது அம்சங்களை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் கோரிக்கை குறித்து பேசினார். மாநகராட்சி அனைத்துத்துறை கூட்டமைப்பு தலைவர் முனியசாமி துவக்கி வைத்தார். பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அமுதா, டான்சாக் மண்டல தலைவர் வீரவேல்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை மாரி, கால்நடை ஆய்வாளர் சங்கம் பிரபாகரன், கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் வளர்மதி, அங்கன்வாடி ஊழியர் சங்கம் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

