/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
/
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 28, 2025 05:24 AM

மதுரை: ''நீர்நிலைகளின் நடுவே மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க சரணாலயம் அமைப்பதைப் போல, நிலம், மணல் திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சரணாலயம் அமைக்க வேண்டும்'' என கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கை- -- இந்தியாவை இணைக்கும் ராம்சேது மணல் திட்டுக்களில் அரியவகை கடல் ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வதை தொடர்ந்து இரண்டாண்டுகள் கண்காணித்து உறுதிப்படுத்தியதாக இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆழ்கடலில் ஆலா பறவைகள்
குழு உறுப்பினர் ரவீந்திரன் நடராஜன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தொடர் ஆய்வுகள் மூலம் இதை கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை 'ஜேர்னல் ஆப் தி ரெட்டன்ட் டாக்ஸா'வில் வெளியானதாக ரவீந்திரன், பைஜூ தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் அரிச்சல் முனையில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள ஆழ்கடலில் பிரிட்ல்டு ஆலா, சாண்டர்ஸ் ஆலா, சிறிய ஆலா, பெரிய கொண்டை ஆலா மற்றும் ரோஸேட் ஆலா மற்றும் சிறிய, பெரிய பழுப்பு ஆலாக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகரித்ததால் அங்குள்ள மணல் திட்டுக்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்திய கிழக்குக் கடற்கரை பகுதிகளில் குறிப்பாக 3 மற்றும் 7 ம் மணல்திட்டு பகுதியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வதை முதன்முறையாக கண்டறிந்தோம். இங்கு மட்டும் 3500 கூடுகள் உள்ளன.
சரணாலயம் வேண்டும்
இந்தியாவைப் பொறுத்தவரை வேறு எந்த இடத்திலும் இவ்வளவு ஆயிரக்கணக்கில் பறவைகள் இருந்தது இல்லை. மணல் திட்டில் கடல் தாவரங்களின் புல்மேட்டில்தான் ஆண்டுக்கு ஒரு முட்டை இடுகின்றன. பெரிய பறவைகள் ஆழ்கடலில் வசித்து தண்ணீரில் மிதந்தபடியே காலத்தை கழித்து விடும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் மணல் திட்டுக்கு வரும். இவற்றின் முட்டைகளை இந்திய, இலங்கை மீனவர்கள் எடுத்துச் செல்வது வேதனையான விஷயம். ஜூனில் இணைசேர்ந்த பின் முட்டையிட தீவுக்கு வரும். இந்த பறவைகள் வலம் வரும் இடங்களில் அதிக மீன்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பறவைகளின் முக்கியத்துவம் குறித்து மீனவர்கள், கடலோர காவல் படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மணல் திட்டுக்கள் கடற்பறவைகள், கடல் ஆமைகளுக்கு உயிர்நாடியாக உள்ளது. எனவே மணல்திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றனர்.