/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை மடக்கிய விவசாயிகள்
/
'ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை மடக்கிய விவசாயிகள்
'ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை மடக்கிய விவசாயிகள்
'ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை மடக்கிய விவசாயிகள்
UPDATED : அக் 29, 2025 08:03 AM
ADDED : அக் 29, 2025 07:38 AM

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில், நெல் கொள்முதல் மையம் திறக்க 'ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' என அதிகாரிகளை கேள்விகளால் விவசாயிகள் துளைத்தெடுத்தனர். கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், நுகர்பொருள் வாணிப கழக (டி.என்.சி.எஸ்.சி.,) மண்டல மேலாளர் சரவணன் பங்கேற்றனர்.
நெல் கொள்முதல் செய்வதற்கு 48 மையங்களுக்கு கலெக்டர் பிரவீன்குமார் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஒன்றிரண்டு மையங்களே திறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 23 மையங்களில் நெல் எடையிடப்படுவதாக டி.என்.சி.எஸ்.சி., மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்ததும், மேலும் 'மையம் திறப்பதாக ஆர்டர் போட்டீங்களே... ஆட்களை போட்டீங்களா' என விவசாயிகள் பலரும் குற்றம் சாட்டினர். மேலும் 'கொள்முதல் மையத்தில் நெல்லை பிடிக்க முடியாது என கலெக்டர் மூலம் அறிக்கை விடுங்கள். நாங்கள் கேட்கமாட்டோம். பாசனத்திற்கு தண்ணீர் திறந்த 120 வது நாளில் நெல் அறுவடையாகும் எனத் தெரிந்தும் வேண்டுமென்றே தாமதமாக நெல் கொள்முதல் மையத்தை திறப்பது, மூடைக்கு இவ்வளவு தொகை என கமிஷன் கேட்பது ஏன்' கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டி.ஆர்.ஓ.அன்பழகன், 'விவசாயிகளாகிய நீங்கள்தான் ராஜா. நெல்லை அளவிடுபவர் தினக்கூலி பணியாளர். அவரிடம், எதற்காக பணம் தரவேண்டும் என நீங்கள் கேளுங்கள். பணியாளரை ராஜா போல நடந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது' என்றதும் விவசாயிகள் அமைதியாகினர். உசிலம்பட்டி கரும்புகள் தனியாருக்கும், செல்லம்பட்டி கரும்புகள் தஞ்சாவூர் அரசு ஆலைக்கும் அனுப்ப அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தஞ்சைக்கு லாரியில் அனுப்பும் போது கரும்புகள் காய்ந்து எடை குறைவதால் எல்லா கரும்புகளையும் தனியாருக்கு அனுப்ப வேண்டும் என ஒரு விவசாயி தெரிவித்ததும், மற்ற விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.
'அலங்காநல்லுார் ஆலையை திறக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். எப்படி தனியாருக்கு மாற்றச் சொல்வீர்கள்' என தங்களுக்குள் மோதினர். மதுரையில் எடை அளவை கணக்கிட்ட பின், கரும்புகளை தஞ்சை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தனிச்சியம் நான்கு வழிச்சாலையால் மூடப்பட்ட வாய்க்காலை திறப்பது, ஏற்குடி அச்சம்பத்து கழிவுநீரை மாடக்குளம் வாய்க்காலில் விடுவதை தடுப்பது, உசிலம்பட்டி நடுமுதலைக்குளத்தில் கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதியை உடைத்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை, அரும்பனுாரில் மீன்வளத்துறையினர் முறையான மீன்பாசி ஏலம் நடத்தவில்லை, டி.கல்லுப்பட்டி வி. ரெட்டரைப்பட்டியில் கல்குவாரியை தடை செய்வது, மாங்குளத்தில் நெற்களம் சீரமைப்பு, மேலுார் சிறுமேளம் கண்மாயில் மடை அமைப்பது, புதுத்தாமரைப்பட்டியில் சிமென்ட் உலர்களத்திற்கு இடம் தேர்வு, திருமங்கலம் உரப்பனுாரில் புதிய நெற்களம், 58 கிராம இடதுபுற கால்வாயை துார்வாருவது, உசிலம்பட்டி கீழக்குடி கண்மாயில் வண்டல் மண் திருடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற மனுக்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

