மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை துவங்கி பெய்து வருகிறது. மாவட்டத்தில் பரவலாக மழை மேகங்கள் திரண்டு இருப்பதால் வெயில் முகம் குறைந்து, குளிர்நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரையான நேரத்தில் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
அதே நேரம் பேரையூரில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் ஒரே நாளில் 89 மி.மீ., மழை பெய்துள்ளது. பிற இடங்களில் மழை விவரம் (மி.மீ.,யில்) வருமாறு:
உசிலம்பட்டி 13, குப்பணம்பட்டி 12.6, விமான நிலையம் 7.8, திருமங்கலம் 4.6, எழுமலை 33.4, கள்ளிக்குடி 10.6. பிற இடங்களில் மழை இல்லை.
அணைகளில் நீர்மட்டம் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.35 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் 6962 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 892 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 67.09 அடி (மொத்த உயரம் 71 அடி). அணையின் நீர் இருப்பு 5109 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 5516 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 1349 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 4.4 அடி.(மொத்த உயரம் 29). அணையின் நீர் இருப்பு 2.62 மில்லியன் கனஅடி. அணைக்கு நீர்வரத்தோ, வெளியேற்றமோ இல்லை.