/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
200க்கும் மேற்பட்ட திருமணங்கள் குன்றத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
/
200க்கும் மேற்பட்ட திருமணங்கள் குன்றத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
200க்கும் மேற்பட்ட திருமணங்கள் குன்றத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
200க்கும் மேற்பட்ட திருமணங்கள் குன்றத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 06, 2024 05:53 AM

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தனியார் மண்டபங்களில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயிலில் 85 பதிவு திருமணங்களும், 50க்கும் மேற்பட்ட பரிகார திருமணங்கள் மற்றும் பதிவில்லாத திருமணங்களும் நடந்தன. இவை தவிர ஊருக்குள் தனியார் மண்டபங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒருமணிநேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளம் கரையிலும், சரவணப் பொய்கை செல்லும் வழியில் உள்ள வாகன காப்பகம் மட்டும் இருப்பதால், திருமணத்திற்கு வந்த வாகனங்கள் ரத வீதிகளிலும், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு பகுதியிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், டூவீலரில் வந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.
பசுமலையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை வாகனங்கள் எதிரும் புதிருமாக சென்றதால், திருப்பரங்குன்றத்திற்கு வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதை ரோட்டில் எதிர் திசையில் வாகனங்கள் வந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கீழ ரத வீதியில் ஒருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது.
திருமண நாட்களில் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், இரண்டு பாலங்களுக்கும் இடைப்பட்ட மெயின் ரோட்டிலும், கீழ் ரத வீதியிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழா காலங்களிலும், முகூர்த்த நாட்களிலும் திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.