/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நித்யானந்தாவின் சீடருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை
/
நித்யானந்தாவின் சீடருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை
ADDED : அக் 23, 2024 05:01 AM
மதுரை : நில அபகரிப்பு முயற்சி வழக்கில் சிக்கிய நித்யானந்தாவின் சீடர், நில விவகாரத்தில் இனி தலையிடமாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யும்பட்சத்தில் முன்ஜாமின் மனு பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை விதித்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. நித்யானந்தாவின் துாண்டுதலின் பேரில் அத்துமீறி நுழைந்து அபகரிக்க முயற்சித்து மிரட்டல் விடுத்ததாக கர்நாடகா பிடாதி நித்யானந்தாபுரியை சேர்ந்த சுரேகா (நித்யானந்தாவின் சீடர்) உள்ளிட்ட சிலர் மீது சேத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
சுரேகா,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.
புகார்தாரர் தரப்பு: நித்யானந்தா தொடர்பான ஒரு வழக்கில் கணேசன் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூரு ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவின் சீடர்களால் அச்சுறுத்தல் உள்ளது. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர் வழக்கறிஞர். இந்நில விவகாரத்தில் வரும்காலங்களில் தலையிடமாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யும்பட்சத்தில் முன்ஜாமின் மனு பரிசீலிக்கப்படும் என அறிவுறுத்தி இன்று (அக்.23) ஒத்திவைத்தார்.

