/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடைகளில் தீ தடுப்பு சாதனங்கள் ஆய்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
கடைகளில் தீ தடுப்பு சாதனங்கள் ஆய்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கடைகளில் தீ தடுப்பு சாதனங்கள் ஆய்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கடைகளில் தீ தடுப்பு சாதனங்கள் ஆய்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 10, 2025 04:50 AM
மதுரை: ஜவுளிக் கடைகள், ஓட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், திருமண மண்டபங்களில் தீ தடுப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் 2020 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: 2020 ல் தீபாவளியன்று (நவ.,14) மதுரை தெற்குமாசி வீதியிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் சிதைந்ததால் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து மதுரையில் 112 கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். பல்வேறு பொதுக் கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறையின் உரிமச் சான்று இல்லை. பல கட்டடங்களுக்கு உரிமத்தை புதுப்பிக்கவில்லை. கட்டடங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கும் முன், முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.
ஜவுளிக் கடைகள், ஓட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், திருமண மண்டபங்களில் தீ தடுப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வு செய்யாமல் கட்டடங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுவில் கோரிய பொதுவான நிவாரணத்தை நீதிமன்றம் வழங்க முடியாது. வணிகக் கட்டடங்களை மேம்படுத்தும்போது தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. இது நடைமுறையிலுள்ள சட்டமாகும். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தர விட்டனர்.