/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை பழமார்க்கெட் வெளியே குப்பை தடுக்க சுற்றிலும் வேலி அமைக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
மதுரை பழமார்க்கெட் வெளியே குப்பை தடுக்க சுற்றிலும் வேலி அமைக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை பழமார்க்கெட் வெளியே குப்பை தடுக்க சுற்றிலும் வேலி அமைக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை பழமார்க்கெட் வெளியே குப்பை தடுக்க சுற்றிலும் வேலி அமைக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : அக் 30, 2025 04:13 AM
மதுரை: மதுரை கே.கே.நகர் பழமார்க்கெட்டிற்கு வெளியே குப்பைகளை குவிப்பதை தடுக்க சுற்றிலும் வேலி அமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை கிருஷ்ணகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை கே.கே.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பழமார்க்கெட் உள்ளது. இங்கு தேங்கும் கழிவுகளை அகற்ற மாநகராட்சி தரப்பில் போதிய வசதிகளை செய்யவில்லை. பழ வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வெளியே குப்பைகளை குவிக்கின்றனர். அவற்றை மாடுகள் உட்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. போதிய குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். கழிவுகளை மார்க்கெட் வளாகத்திற்கு வெளியே குவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அக்.15 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,'சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை இல்லை. மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும்,' என உத்தரவிட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் அபிமன்யு ஆஜரானார்.
மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தேவசேனா: பழமார்க்கெட்டில் 240 கடைகள் உள்ளன. 20 குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மக்கும் குப்பைகளுக்காக மார்க்கெட் பின்புறம் ஒரு தொட்டி உள்ளது. அக்கழிவுகள் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும். கழிவுகளை பாதை, வெளியில் குவிக்கும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மூலம் துாய்மைப் பணி நடக்கிறது. குப்பைகள், அழுகிய பழங்களை வெளியில் குவிப்பதை தடுக்க மார்க்கெட்டை சுற்றிலும் வேலி அமைக்கப்படும். இவ்வாறு கூறி அறிக்கை சமர்ப்பித்தார். அபராத தொகை செலுத்தியதற்கான ரசீது சமர்ப்பிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

