/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 13, 2025 12:44 AM
மதுரை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வடக்கு கரிசல்குளத்தில் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்ட தொகை பெற தகுதியற்றவர் என ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
வடக்கு கரிசல்குளம் கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனு:
வடக்கு கரிசல்குளத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களிலுள்ள சொத்தின் உரிமையாளர் எனது தந்தை கருப்பையா. நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் தந்தைக்கு பட்டா வழங்கப்பட்டது. அவர் 2007ல் உயில் எழுதி சொத்தினை எனக்கு வழங்கினார். தந்தை 2013 ல் இறந்தார். அதன் பின் சொத்தின் உரிமையாளராக அனுபவித்து வருகிறேன்.
தமிழக அரசின் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் தொகையை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்தேன்.
அதன் கீழ் பகுதியளவு பணத்தை பெற்று, கட்டுமானம் மேற்கொள்ள முயற்சித்தேன். வட்டார வளர்ச்சி அலுவலர் தொகை ஒதுக்கீட்டை 2024 டிச.,12ல் ரத்து செய்தார். திட்டத்தின் கீழ் சலுகை பெற எனக்கு உரிமை உண்டு. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் திட்ட பயனாளியாக இருக்க மனுதாரர் தகுதியற்றவர் என ரத்து செய்யப்பட்டது. கிராமங்களில் குடிசைகளில் வசிப்போர் நிரந்தர வீடுகளை கட்டிக் கொள்ள உதவ 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை தமிழக அரசு 2024 ல் கொண்டுவந்தது.
வேறு எங்காவது நிரந்தர வீடு இருந்து குடிசையில் வசிப்பவர். உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பிற அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு (பகுதி நேரம், ஒப்பந்தம் மற்றும் தினசரி சம்பள நியமனம் தவிர) அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு சொந்தமான குடிசைகள் இருந்தால் இத்திட்டத்தின்படி பயனடைய தகுதியற்றவர்கள் என நிபந்தனைகளில் உள்ளது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: திட்டத்தின் நோக்கம், நிரந்தர குடியிருப்பு இல்லாத நபர்கள் வீடு அமைக்க உதவுவது. மனுதாரரின் தந்தை ஏற்கனவே மத்திய அரசின் திட்டம் மூலம் வீடு கட்டினார். தற்போதைய திட்டத்தின் கீழ் பயனடைய மனுதாரருக்கு சாதகமாக உத்தரவு வழங்கிய பின், அவர் தனது மகன் காளிராஜிற்கு சாதகமாக சொத்தினை எழுதி வைத்தார். அரசின் மானிய உதவி என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பம் மீண்டும், மீண்டும் பயனடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல.
ஏழைகள் தங்கள் குடிசைகளுக்கு பதிலாக ஒரு வீட்டை அமைக்க உதவ இத்திட்டம் உருவாக்கப்பட்டது. மனுதாரரின் தந்தை அத்தகைய ஒருவர் என கண்டறியப்பட்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அவர் பயனடைந்தார். மனுதாரரின் குடும்பம் ஏற்கனவே பயனடைந்துள்ளது. இத்திட்ட பயனை மனுதாரருக்கு மீண்டும் வழங்க முடியாது. புகாரின் பேரில் மனுதாரரிடம் விளக்கம் பெறப்பட்டது. அதன் பிறகு மனுதாரருக்கு சாதகமான வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதில் இயற்கை நீதி மீறப்படவில்லை.
மனுதாரரின் மகன் காளிராஜ் தமிழக மின்வாரியத்தில் நிரந்தர ஊழியர். மாதம் ரூ.51 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என்பதில் சர்ச்சை இல்லை.
மனுதாரர் தகுதியற்றவர் என்பதால், ரத்து செய்த உத்தரவில் தலையிட எந்த காரணத்தையும் நான் காணவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரப்பூர்வ கணக்கில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.