/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி; தென்னை விவசாயிகளே கேளுங்கள்
/
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி; தென்னை விவசாயிகளே கேளுங்கள்
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி; தென்னை விவசாயிகளே கேளுங்கள்
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி; தென்னை விவசாயிகளே கேளுங்கள்
ADDED : ஜூன் 30, 2025 03:07 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி, சோழவந்தான் வட்டார தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் தென்படுகிறது. இதனால் சராசரியாக 10 முதல் 15 சதவிகிதம் வரை பொருளாதார சேதம் ஏற்படும்.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைச்செல்வி தெரிவித்துள்ளதாவது: பருவ கால மாற்றத்தால் இளம், வளரும் கன்றுகளில் பெருமளவில் இத்தாக்குதல் காணப்படுகிறது. விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடி மட்டைகள், விரியாத பாளைகளில் துளைகள் காணப்படும். முக்கோண வடிவில் இலைகள் வெட்டியது போன்று திருவேடகம், குலசேகரன்கோட்டை பகுதிகளில் தென்பட்டது.
இறந்த மரங்களை தோப்புகளில் இருந்து அகற்றி எரித்து விட வேண்டும். தொழு உரத்தை குழிகளில் இருந்து எடுக்கும் பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள், கூட்டுப்புழுக்களை சேகரித்து அழித்து விட வேண்டும். புழுக்களை உண்டு அழிக்கும் பச்சை மஸ் கார்டைன் பூஞ்சாணம் ஒரு கிலோவை ஐந்து கிலோ எருவுடன் கலந்து எருக் குழிகளில் இட்டு அழிக்க வேண்டும். இவ்வகை பூஞ்சாணத்தை அரசு உயிரியல் ஆய்வகங்கள், வேளாண் பல்கலையில் பெறலாம்.
வண்டுகள் மென்று மரச் சக்கைகள் வெளியேறிய துவாரங்களில் கம்பி, சுளுக்கியால் வண்டுகளை குத்தி வெளியில் எடுத்து கொன்று விட வேண்டும். நாப்தலின் உருண்டை வைத்தும் வண்டுகளை விரட்டி அடிக்கலாம். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊற வைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 1 முதல் 3 ரைனோலீயூர் கவர்ச்சிப் பொறிகளை வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இதனை தென்னையில் மரங்களிலோ ஓலைகளிலோ கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இப்பொறிகளை தென்னை மரம் இல்லாத வெளிப்பரப்பில் இரும்பு அல்லது மரத்தூணில் ஆறு அடி உயரத்தில் கட்டி தொங்கவிட வேண்டும் கவர்ச்சி பொறிகளில் விழும் வண்டுகளை உடனே அழித்து விட வேண்டும். 79049 61022ல் தொடர்பு கொண்டு இன கவர்ச்சி பொறி பெறலாம் என்றார்.