/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக
/
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக
ADDED : செப் 21, 2025 05:33 AM
எனது மகள் 10 வயதில் பூப்படைந்தாள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைவாக உள்ளது. அதனால் ஏதும் பிரச்னை வருமா.
- ஸ்வர்ணலதா, மதுரை
10 வயது முதல் 16 வயதிற்குள் பூப்பெய்வது இயற்கையான விஷயம், பயப்பட வேண்டாம். வாழ்க்கை முறை மாற்றங்கள், மாறும் உணவுப்பழக்கம், ரசாயனங்களால் ஏற்படும் ஹார்மோன் வேறுபாடுகளால் முன்பை விட தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருவது உண்மை தான். மாதவிடாய் ரத்தப்போக்கினால் ஹீமோகுளோபின் குறையும். எனவே இரும்புச்சத்துள்ள உணவு வகைகளுடன் பால், முட்டை, புரத உணவுகளும் கொடுப்பது நல்லது. பூப்பெய்திய இரண்டாண்டுகள் வரை மாதவிடாய் ஒழுங்கற்று வரும். அதன்பின் மாதந்தோறும் மாதவிடாய் வரும். சாதாரணமாக 12 வயதில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவில் இரும்புச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம். தவிர கொக்கிப்புழு தாக்கம், மலேரியா, மாதவிடாய் அதிகம் போவது போன்றவையும் காரணமாக சொல்லலாம். பச்சை காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம், அத்திப்பழம், அசைவ உணவில் ஈரல், சுவரொட்டி, முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் பூச்சி மாத்திரை (டீ வார்ம்), இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் ரேவதி ஜானகிராம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர், மதுரை
காலநிலை மாற்றத்தால் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய தீர்வு என்ன.
- சுமதி, பண்ணைக்காடு
மழை, வெயில் என மாறுபட்ட காலநிலை உள்ளது. குளிர்ச்சியான பானங்களை அருந்துவது, தண்ணீரை காய்ச்சாமல் குடிப்பது உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னைகளால் தொண்டை வலி ஏற்படலாம். தொண்டை வலிக்கு காலை, மாலையில் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். காய்கறி சூப் உள்ளிட்ட அசைவ உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு கட்டுப்படுத்தப்படும். இது தற்காலிக தீர்வு. வலி தொடரும் பட்சத்தில் டாக்டரை அணுகவும்.
- -டாக்டர் பொன்ரதிதலைமை மருத்துவர்அரசு மருத்துவமனைகொடைக்கானல்
தோலில் படர்தாமரை தொடர்ந்து பரவுகிறது. மருந்து எடுத்து குணமடைந்த சில மாதங்களில் வேறு இடத்தில் பரவுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா.
-எஸ்.பாலமுருகன், ராமநாதபுரம்
உடலில் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதியில் படர்தாமரை வருதற்கான வாய்ப்பு அதிகம். இதை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். படர் தாமரை உள்ள பகுதியில் அருகம்புல், தேங்காய் எண்ணெய் சேர்ந்த தைலம் பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் கட்டுக்குள் வந்து விடும்.அதிகப்படியான அரிப்பை தரக்கூடிய கத்தரிக்காய், கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதே போல் உடலையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக பராமரிக்க வேண்டும். படர் தாமரை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடியது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.
அதனால் படர் தாமரை உள்ள நபர் பயன்படுத்தும் பொருட்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். துணிகளை துவைத்த பின் டெட்டால் கலந்த நீரில் அலசி பயன்படுத்த வேண்டும். ஈரமான துணிகளை அணியக் கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர் பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது கூட பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் பயப்பட வேண்டிய தேவையில்லை. மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால் 15 முதல் 30 நாட்களில் பூரண குணமடையலாம்.
-டாக்டர் மோகன கிருஷ்ணன் சித்த மருத்துவர்ராமநாதபுரம்
மூச்சுக்குழாய் நுரையீரல் பரிசோதனை என்றால் என்ன
- கா.சரவணபெருமாள்சிவகங்கை
மூச்சுக்குழாய் நுரையீரல் பரிசோதனை என்பது (Bronchoscopy) நுரையீரலை உள்ளே பார்த்து பரிசோதிக்கும் ஒரு சிறப்பு முறை. இதில் ஒரு மென்மையான சிறிய குழாயை (கேமராவுடன் கூடியது) நுரையீரலுக்குள், மூக்கு அல்லது வாய் வழியாக நுழைத்து, நுரையீரல் மற்றும் காற்றுக்குழாயைப் நேரில் காண முடியும்.
இந்த பரிசோதனை நீண்ட நாட்களாக குணமடையாத நிமோனியா, காரணம் தெரியாத காய்ச்சல், நுரையீரல் காசநோய் அல்லது புற்றுநோய் இருக்கிறதா என தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்கிருமி என்ன, அது காசநோயா அல்லது புற்றுநோயா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
பரிசோதனை செய்யும்போது மெதுவாக ஒரு குழாய் நுழைக்கப்படும். இது மிக பாதுகாப்பானது. சில நேரங்களில் சிறு ரத்தக்கசிவு அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் அவை எல்லாம் மருத்துவக் கண்காணிப்பில் எளிதாகக் கையாளக்கூடியவை தான்.
- டாக்டர் கீர்த்தி பிரகாஷ்உதவி பேராசிரியர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
எனக்கு 68 வயது ஆகிறது. அடிக்கடி இருமலால் பாதிக்க பட்டு வருகிறேன். ஆங்கில மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. சித்த மருத்துவத்தில் எப்படி சரி செய்வது. -
- குருசாமி, ஸ்ரீவில்லிபுத்துார்
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும், ஆஸ்துமா, இளைப்பு பாதிப்பு இருந்தாலும் இருமல் வரலாம். இதனை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் திப்பிலி ரசாயனம், ஆடாதோடா மணப்பாகு, தாளிசாதி வடகம் போன்ற மருந்துகள் உள்ளது.
-- டாக்டர் எஸ். சந்திரசேகரன்அரசு சித்த மருத்துவர்ஸ்ரீவில்லிபுத்துார்