/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசு அனுமதி கிடைத்தால் மூன்றாண்டுகளில் மதுரையில் 'மெட்ரோ'
/
மத்திய அரசு அனுமதி கிடைத்தால் மூன்றாண்டுகளில் மதுரையில் 'மெட்ரோ'
மத்திய அரசு அனுமதி கிடைத்தால் மூன்றாண்டுகளில் மதுரையில் 'மெட்ரோ'
மத்திய அரசு அனுமதி கிடைத்தால் மூன்றாண்டுகளில் மதுரையில் 'மெட்ரோ'
ADDED : டிச 22, 2024 07:13 AM

மதுரை ''மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 3 ஆண்டுகளில் மதுரை மெட்ரோ பணிகள் நிறைவுபெறும்'' என சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்தார்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், ரூ.11 ஆயிரத்து 340 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. ஒத்தக்கடை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் துவங்கி உயர்நீதிமன்றம், புதுார், தல்லாகுளம், கோரிப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன், ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரை 32 கி.மீ., துாரத்திற்கு 17 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ளது.
புதுாரில் ஓட்டல் தமிழ்நாடு அருகே துவங்கி வைகை ஆற்றின் கீழாக ஆண்டாள்புரம் வரை சுரங்கப்பாதையாக அமைய உள்ளது. அமெரிக்கன் கல்லுாரி, மீனாட்சி அம்மன் கோயில் ஸ்டேஷன்கள் சுரங்கப்பாதையில் அமையஉள்ளன.
ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை பணிகளை திட்ட இயக்குநர் அர்ஜூனன் நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
மதுரையில் மெட்ரோ அமைய அனைத்துவித சாத்தியக் கூறுகளும் உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது உள்ளது. இதற்கிடையில் சிக்கலான பகுதிகள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமையவுள்ள சுரங்கப் பாதை ராமேஸ்வரம் செல்லும் தண்டவாளத்தையும், அதன்பின் பூமிக்கு மேல் அமையவுள்ள பாதை விருதுநகர் செல்லும் ரயில் தண்டவாளத்தையும் கடக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையே ஒரு வளைவும் வருகிறது.
ரயில்வே நிர்வாக பரிந்துரைப்படி, தண்டவாளத்திற்கும் சுரங்கப்பாதைக்கும் இடையே குறைந்தபட்சம் 10 மீ., இடைவெளியும், தண்டவாளத்திற்கும் மேம்பாலத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 6.7 மீ., இடைவெளியும் இருந்தால் மட்டுமே நிர்வாகம் ஒப்புதல் வழங்கும். அதற்கான அறிக்கை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 6 மாதங்களில் டெண்டர் விடப்பட்டு, 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ திட்டத்தை மதுரைக்கும், கோவைக்கும் ஒரே கட்டமாக செயல்படுத்தி வருகிறோம்.
மதுரையில் அமையவுள்ள வழித்தடம் பெரும்பாலும் சுரங்கப்பாதையாக அமைவதால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னை கிடையாது. எனினும் பூமிக்கடியில் உள்ள பாறைகளால் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார்.
ரயில்வே உதவிக் கோட்டப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், மெட்ரோ உதவி மேலாளர் திருமுருகன் உடனிருந்தனர்.